திருச்சி: திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் பணியாற்றும் ஊழியர்களுக்கான பணி நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ரயில்வே நிர்வாகம் நேற்றுமுன்தினம் வௌியிட்டது. பணியாளர்கள் தங்களுடைய வருகையை பதிவு செய்ய வேண்டும். கொரோனா காலத்திற்கு முன்பு பொதுவேலை நேரம் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4.45 மணி வரை பணியாற்றும்படி இருந்தது. கொரோனா தொடங்கிய உடன் பொது வேலை நேரம் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5.45 மணியாக மாற்றம் செய்யப்பட்டது. தற்போது ரயில்வே நிர்வாகம் வேலை நேரத்தை மீண்டும் பழையமுறைப்படி அமல்படுத்தி நேற்று முதல் செயல்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது.
அதன்படி காலை 7 மணிக்கு தொடங்கும் பொதுவேலை நேரத்திற்கு வரும் ஊழியர்கள் காலை 6.50 முதல் 7 மணிக்குள் பயோமெட்ரிக் முறையில் தங்களுடைய வருகையை பதிவு செய்ய வேண்டும். அதேபோல் அவர்கள் மதிய உணவு இடைவெளிக்கு பணியிடத்தில் இருந்து புறப்படும் நேரமான 11.35 மணி முதல் 11.45 மணிக்குள் வௌியேறிவிட வேண்டும். உணவு இடைவேளை முடிந்து மீண்டும் பணிக்கு திரும்பு ஊழியர்கள் 12.25 மணியிலிருந்து 12.35 மணிக்குள் பணிமனைக்குள் வர வேண்டும். மீண்டும் பொதுவேலை நேரம் முடியும் மாலை 4.48க்கு பணிமனையைவிட்டு வெளியேறிவிட வேண்டும். இந்த பணி நேரமானது திங்கள் முதல் வௌ்ளிக்கிழமை வரை பின்பற்றப்படும். சனிக்கிழமை மட்டும் அதேபோல் காலை 7 மணிக்கு துவங்கும் முதல் பகுதி வேலையானது காலை 11.50 வரையும் செயல்படும்.
இதற்கு காலை 6.50 முதல் 7 மணிக்குள் வருகையை பதிவு செய்ய வேண்டும். அதேபோல் பணி முடியும் 11.50 மணியிலிருந்து 12 மணிக்குள் பணிமனையில் இருந்து வௌியேற வேண்டும் என அறிவித்துள்ளது. இதற்கு முன் இருந்த பணி நேரத்தில் மற்ற ஊர்களில் இருந்து பயணம் செய்து பணிக்கு வந்ததால், மீண்டும் வீடு திரும்பும்போது அதிக நேரம் செலவாகிறது. அதேபோல் அவர்கள் இரவு 7 மணிக்கு பிறகே வீட்டிற்கு சென்றடையும் நிலை இருந்து வந்தது. ஆனால் தற்போது வேலை நேரம் மாற்றியதால், மாலை 4.45 மணிக்கெல்லாம் பணிகள் முடிந்து மிக விரைவாக வீட்டிற்கு செல்ல முடியும் என்பதால் ரயில்வே பணிமனை ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post பொன்மலை ரயில்வே பணிமனையில் வேலைநேரம் காலை 7 மணிக்கு மாற்றம்: தொழிலாளர்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.