×
Saravana Stores

தாம்பரம் ரயில் நிலையத்தில் ஓட்டல் ஊழியரிடம் ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரன் உறவினர் உள்பட 2 பேருக்கு சிபிசிஐடி சம்மன்

தாம்பரம்: தாம்பரம் ரயில் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஓட்டல் ஊழியரிடம் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ம் தேதி நடந்து முடிந்தது. இதையொட்டி, மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வகையில், கடந்த 6-ம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் சென்னை எழும்பூர் – நெல்லை விரைவு ரயிலில் சோதனை நடத்திய பறக்கும் படையினர், உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ.4 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர். பணத்தை கொண்டு சென்றதாக நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்களான சென்னை கொளத்தூர் திரு.வி.க. நகர் சதீஷ், அவரது தம்பி நவீன், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த பெருமாள் ஆகிய 3 பேரை தாம்பரம் போலீஸார் கைது செய்தனர்.

நயினார் நாகேந்திரனின் தேர்தல் செலவுக்காக கொண்டு சென்றதாக அவர்கள் கூறிய நிலையில், தனக்கும் பணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவர் திட்டவட்டமாக மறுத்தார். இந்த நிலையில், வழக்குக்கான ஆதாரங்களை திரட்டும் வகையில், நயினார் நாகேந்திரன், பாஜக நிர்வாகியான சென்னையை சேர்ந்த கோவர்த்தனன் உட்பட 8 பேருக்கு தாம்பரம் மாநகர காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. அதில் 3 பேர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். இதற்கிடையே, தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் பரிந்துரையை ஏற்று, வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக சட்டம் – ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் கடந்த 26-ம்தேதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, தாம்பரம் மாநகர காவல் துறையிடம் இருந்த வழக்கு ஆவணங்கள், விசாரணை விவரங்கள் அனைத்தும் சிபிசிஐடி பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன. சிபிசிஐடி டிஎஸ்பி சசிதரன் முன்னிலையில், விசாரணை அதிகாரியான காவல் ஆய்வாளர் லோகநாதன் கடந்த 28-ம் தேதி விசாரணையை தொடங்கினார்.

முன்னதாக, 15 பேரிடம் விசாரணை நடத்தி, சுமார் 350 பக்கவிசாரணை அறிக்கையை தாம்பரம் போலீஸார் தயார் செய்திருந்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 4 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. அதுகுறித்து விசாரணையை தொடங்கிய ஆய்வாளர் லோகநாதன், தாம்பரம் போலீஸார் அளித்த ஆவணங்களின் அடிப்படையில் 4 பிரிவுகளில் புதிதாக வழக்கு பதிவு செய்தார். இந்நிலையில் நெல்லை பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகனுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த ஓட்டுனர் பெருமால் என்பவருக்கும் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இன்று காலை 11 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகுமாறு இருவருக்கும் சம்மன் அனுப்பியுள்ளனர். இருவரிடமும் விசாரணை நடத்திய பின் நயினார் நாகேந்திரனுக்கும் சம்மன் அனுப்ப சிபிசிஐடி போலீசார் திட்டம் என தகவல் தெரிவித்துள்ளனர்.

The post தாம்பரம் ரயில் நிலையத்தில் ஓட்டல் ஊழியரிடம் ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரன் உறவினர் உள்பட 2 பேருக்கு சிபிசிஐடி சம்மன் appeared first on Dinakaran.

Tags : Thambaram railway station ,CBCID ,Nayinar Nagendran ,Tambaram ,Nayinar Nagendran Hotel ,railway ,station ,Lok Sabha elections ,Tamil Nadu ,Tambaram railway station ,Samman ,
× RELATED ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி சிக்கிய...