- நாகப்பட்டினம் பாராளுமன்றம்
- நாகப்பட்டினம்
- நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல்
- நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதி
- தின மலர்
நாகப்பட்டினம், ஏப்.30: நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் நாள் ஒன்றுக்கு 3 ஷிப்ட் முறையில் 3 அடுக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் கடந்த 19ம் தேதி முடிவடைந்துள்ளது. வாக்குப்பதிவு தினத்தில் நாகப்பட்டினம், வேதாரண்யம், கீழ்வேளூர், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்திய 1551 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது. இவ்வாறு பயன்படுத்திய வாக்குப்பதிவு இயந்திர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான நாகப்பட்டினம் அருகே செல்லூர் பாரதிதாசன் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டது. இவை அனைத்தும் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்புடன் ஸ்ட்ராங் அறையில் சட்டமன்ற தொகுதிவாரியாக வைக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் ஜூன் மாதம் 4ம் தேதி எண்ணப்படவுள்ளது. அதுவரை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல் அடுக்கு பாதுகாப்பில் மத்திய தொழிற்துறை பாதுகாப்பு படையினர் ஆயுதம் ஏந்திய நிலையில் சுழற்சி முறையில் பாதுகாப்பில் உள்ளனர். இரண்டாவது அடுக்கு பாதுகாப்பில் தமிழ்நாடு சிறப்பு படை காவலர்கள் ஆயுதம் ஏந்திய நிலையிலும், மூன்றாவது அடுக்கு பாதுகாப்பில் தமிழ்நாடு மாநில காவல்துறை ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் பாகாப்பில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள அறைகள் மற்றும் கல்லூரி வளாகம் முழுமையாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கண்காணிப்பு பணிகளை வேட்பாளர்கள் மற்றும் அவர்களது சார்பில் முகவர்கள் கண்காணிப்பதற்காக அனுமதி வழங்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர். மேலும் தீ தடுப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டும், 24 மணி நேர தீயணைப்பு வண்டிகள் மற்றும் வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள கல்லூரி வளாகம் முழுமைக்கும் தடையற்ற மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றி 350 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு ஏபிசி என மூன்று பிரிவுகளாக பிரித்து சுழற்சி முறையில் 8 மணி நேரம் வீதம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். காலை 8 மணி முதல் மதியம் 4 மணி வரை, 4 மணியில் இருந்து இரவு 12 மணி வரையிலும், இரவு 12 மணியில் இருந்து காலை 8 மணி வரை என மூன்று சுழற்சி முறையில் போலீசார் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பில் உள்ளனர்.
ஒரு சுழற்சி பாதுகாப்பு பணியில் ஒரு டிஎஸ்பி தலைமையில் 2 இன்ஸ்பெக்டர்கள், 4 சப்-இன்ஸ்பெக்டர்கள், 20 ஏட்டுகள், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து 10 ஆயுதப்படை பிரிவு போலீசார், தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசார் 17 பேர், வெடிகுண்டு சோதனை பிரிவு போலீசார் 2, மத்திய தொழிற் பாதுகாப்பு படை பிரிவு போலீசார் 8 என ஒரு சுழற்சிக்கு 64 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதே போல் மற்ற இரண்டு சுழற்சி முறையிலும் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் ஜானிடாம்வர்கீஸ் கூறியதாவது: வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள செல்லூர் பாரதிதாசன் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் ட்ரோன்கள் உள்ளிட்ட வீடியோ கேமராக்கள் மற்றும் ஆளில்லா விமானம் போன்றவை பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
The post நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு appeared first on Dinakaran.