பழநி, ஏப்.30: பழநி வனப்பகுதி எல்லைகளில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பழநி மற்றும் ஒட்டன்சத்திரம் வனச்சரத்திற்குட்பட்ட மலையோர கிராமங்களில் கடந்த சில வருடங்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வனத்துறையினர் சோலார் மின்வேலி அமைத்தல், அகழி அமைத்தல் போன்ற பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டும் கிராமங்களுக்குள் யானைகள் புகுந்து விடுகின்றன.
பழநி மற்றும் ஓட்டன்சத்திரம் வனப்பகுதியை ஓட்டிய கிராமங்களில் மக்காச்சோளம் போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த சில தினங்களாக வனப்பகுதி எல்லைகளில் யானைகளின் நடமாட்டம் இருந்து வருகிறது. இவை உணவு தேடி வனப்பகுதி எல்லைகளை ஒட்டிய கிராமங்களுக்குள் புகுந்து விடும் அபாயம் நிலவுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வனத்துறை அதிகாரிகள் யானைகளின் நடமாட்டத்தை கண்டறிந்து அவற்றை வனப்பகுதிக்குள் விரட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கோம்பைபட்டியைச் சேர்ந்த விவசாயி துரைராஜ் கூறுகையில், “எங்கள் பகுதிக்குள் காட்டு யானைகள் அவ்வப்போது வருகின்றன. சில சமயம் கூட்டமாகவும், சில முறை ஒற்றையாகவும் வந்து தொல்லை தருகின்றன. பயிர்கள் மற்றும் வீடுகளை சேதப்படுத்துகின்றன. வனத்துறையினர் ரோந்துப்பணியை தீவிரப்படுத்தி யானைகளை காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
The post பழநி வனப்பகுதி எல்லைகளில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு appeared first on Dinakaran.