ஒடுகத்தூர், ஏப். 30: ஒடுகத்தூர் அருகே 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்து விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார். குடும்ப பிரச்னையால் தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த பிச்சாநத்தம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ்க்கும்(40), திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நாராயணிபுரம் கிராமத்தை சேர்ந்த பவித்ராவுக்கும்(30), கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு, ரித்திக்(9), ரித்திகாஸ்ரீ (7), பிள்ளைகள் இருந்தனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வேலை தேடி தனது குடும்பத்துடன் சுரேஷ் சென்னை மயிலாப்பூருக்கு சென்று வாடகை வீட்டில் வசித்து வந்தார். அங்கு சுரேஷ் ஒரு தனியார் துணிக்கடையில் கேஷியராக வேலை பார்த்து வந்துள்ளார்.
சுரேசுக்கு சொந்தமாக பிச்சாநத்தம் கிராமத்தில் 4 ஏக்கரில் விவசாய நிலம் உள்ளதால் கணவன், மனைவி சொந்த ஊருக்கே சென்று அங்கேயே வேலை பார்க்கலாம் என்று முடிவு செய்தனர். அதன்படி, கடந்த 12ம் தேதி சுரேஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சொந்த ஊருக்கே வந்துள்ளார். பின்னர், 10 நாட்களுக்கு முன்பு வேலூரில் உள்ள தனியார் ஓட்டலில் கேஷியராக வேலைக்கு சேர்ந்துள்ளார். அதேபோல், தனது குழந்தைகளையும் பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கையும் எடுத்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை 9 மணியளவில் பவித்ரா தனது 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு விவசாய நிலத்திற்கு சென்றுவருதாக கணவனிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர்கள் வீட்டிற்கு வரவில்லை. அப்போது, கிராமத்தை சேர்ந்த சிலர் சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் வந்து உனது குழந்தை கிணற்றில் சடலமாக கிடக்கிறது என்று கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் பதறியடித்துக் கொண்டு கிணற்றில் வந்து பார்த்தபோது பெண் குழந்தை சடலமாக கிடப்பது தெரிய வந்தது. ஆனால், மனைவி மற்றும் மகன் இல்லை.
இதுகுறித்து, உடனே வேப்பங்குப்பம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் சசிதரன் (பொறுப்பு) தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர், தீயணைப்பு வீரர்கள் முதலில் கிணற்றில் சடலமாக கிடந்த குழந்தையை மீட்டனர். பிறகு, தாய், மகன் தண்ணீருக்கு அடியில் சிக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வீரர்கள் கிணற்றில் மூழ்கி தேடி பார்த்தனர். அப்போது, சுமார் அரை மணி நேரம் தேடுதலுக்கு பிறகு தாய் பவித்ராவை சடலமாக மீட்டனர். தொடர்ந்து, சிறுவனை தேடி வந்த நிலையில் சிறிது நேரத்தில் அவனும் சடலமாக மீட்க்கப்பட்டான். இதனை பார்த்த குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது. பின்னர், சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கியது.
பவித்ரா குடும்ப பிரச்னை காரணமாக தனது 2 குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி கொலை செய்து விட்டு தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம்? அல்லது, கிணற்றில் நீச்சல் பழக வந்தபோது தவறி விழுந்து இறந்திருக்கலாம்? இல்லை வேறு ஏதேனும் காரணமா என்று விசாரணை நடத்தி வருகிறோம் என்று போலீசார் தரப்பில் தெரிவித்தனர். ஒடுகத்தூர் அருகே பெற்ற 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளிவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
The post 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்று தாய் தற்கொலை குடும்ப பிரச்னையா? போலீசார் விசாரணை ஒடுகத்தூர் அருகே சோகம் appeared first on Dinakaran.