×

திருவள்ளூர் எம்ஜிஆர் நகர் பகுதியில் உண்டியலை உடைக்க முடியாத கோபத்தில் மாதா சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள்

 

திருவள்ளூர்: திருவள்ளூர் ஜெ.என். சாலையில் உள்ள புனித பிரான்சிஸ் சலேசியர் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு சொந்தமான உப கோயில் புனித ஆரோக்கிய அன்னை மாதா சிலை திருவள்ளூர் நகராட்சி பெரியகுப்பம் எம்ஜிஆர் நகரில் உள்ளது. எம்ஜிஆர் நகர், பூங்கா நகர், என்ஜிஓ காலனி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் அவ்வழியாக செல்லும் போது மாதாவை வழிபட்டு விட்டு உண்டியலில் காணிக்கை செலுத்தி விட்டு செல்வது வழக்கம்.

இந்நிலையில் இந்த சிலையின் கீழே உள்ள உண்டியலை உடைக்க முயன்று முடியாததால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் மாதா சிலையின் மீது பெரிய பாறாங்கல்லை வீசி கண்ணாடியை உடைத்து விட்டு சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த தேவாலயத்தின் பங்குத்தந்தை கிளெமென்ட் பாலா திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் அளித்ததன் பேரில், சப் இன்ஸ்பெக்டர் கண்ணன் நேரில் விசாரணை நடத்தினார்.

குடிபோதையில் உண்டியலை உடைக்க முயன்று முடியாததால் மர்ம நபர்கள் இந்த நாச வேலையில் ஈடுபட்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். எம்ஜிஆர் நகர் பகுதியில் கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதால் மது அருந்திவிட்டு செல்லும் நபர்களால் இந்த சம்பவம் அரங்கேறியிருக்க கூடும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே காவல்துறையினர் தீவிர விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருவள்ளூர் எம்ஜிஆர் நகர் பகுதியில் உண்டியலை உடைக்க முடியாத கோபத்தில் மாதா சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் appeared first on Dinakaran.

Tags : MGR Nagar ,Tiruvallur ,Mata ,Thiruvallur ,J.N. ,St. Francis Salesian Christian Church ,St. Arogya Anai ,Periyakuppam MGR ,Tiruvallur Municipality ,Park Nagar ,Thiruvallur MGR Nagar ,
× RELATED சாலையில் ரகளை; வாலிபர் கைது