×
Saravana Stores

தொழிற்சாலையில் பணிபுரிந்ததால் நுரையீரல் பாதிப்பு மருத்துவ செலவை பெற்றுத்தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு: ஆக்சிஜன் சிலிண்டரை சுமந்தபடி வந்ததால் பரபரப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், ஆரணி, புதிய தமிழ் காலனியை சேர்ந்தவர் பிரவீன்குமார்(45). இவர் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள சிலிக்கான் பவுடர் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த பல மாதங்களாக சுவாச கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் நுரையீரல் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது எனக்கூறி சிகிச்சை அளித்து வந்துள்ளனர். பிறகு அங்கிருந்து சென்னை காவேரி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்தார். அங்கு சிகிச்சை அளித்து குணப்படுத்த ரூ.45 லட்சம் செலவு ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் 10 ஆண்டுகள் பணிபுரிந்த தனியார் தொழிற்சாலைக்கு சென்று மருத்துவ உதவிக்காக பணம் கேட்டபோது அவர்கள் பணம் தர மறுத்து விட்டனர்.

தற்போது மிகப்பெரிய ஆக்சிஜன் சிலிண்டருடன் செயற்கை சுவாசத்தால் மட்டுமே அவர் உயிர் வாழக்கூடிய சூழ்நிலை உள்ளது. இதனால் பிரவீன் குமார் தனது மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் ஆக்சிஜன் சிலிண்டரை சுமந்தபடி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார்.

ஆக்சிஜன் சிலிண்டருடன் வந்த அவரைப் பார்த்து அதிகாரிகள் நீங்கள் ஏன் வந்தீர்கள்? வேறு நபர்களை அனுப்பியிருக்கலாமே என கேட்டதோடு, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். மேலும் தனியார் தொழிற்சாலையில் நாங்கள் பேசி நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்து அனுப்பி வைத்தனர். இதனால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post தொழிற்சாலையில் பணிபுரிந்ததால் நுரையீரல் பாதிப்பு மருத்துவ செலவை பெற்றுத்தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு: ஆக்சிஜன் சிலிண்டரை சுமந்தபடி வந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Praveen Kumar ,New Tamil Colony, ,Arani, Tiruvallur district ,Chipkot Industrial Estate ,Kummidipoondi ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி...