புதுடெல்லி: தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) கடந்த 2017ம் ஆண்டிலிருந்து பாடபுத்தகங்களை அரிதாகவே புதுப்பித்து வருகிறது. இதுதொடர்பாக இதுவரை எந்த ஒரு கட்டாயமும் இருந்ததில்லை. கொரோனா காலகட்டத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால், அதன் பிறகு பாடபுத்தகங்களில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது கூட சர்ச்சையானது. இந்நிலையில், இனி ஆண்டுதோறும் பாடபுத்தகங்களை ஆய்வு செய்து புதுப்பிக்க வேண்டுமென என்சிஇஆர்டிக்கு ஒன்றிய கல்வி அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘இன்றைய வேகமாக மாறி வரும் உலகில், பாடபுத்தகங்கள் புதுப்பிக்கப்படுவது அவசியம். இதனால், புதிய கல்வியாண்டு தொடங்கும் முன்பாக, பாடபுத்தகங்களை என்சிஇஆர்டி ஆய்வு செய்து புதுப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒரு சிஸ்டமை உருவாக்கவும் கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. என்சிஇஆர்டி புத்தகங்கள் அச்சிடப்பட்டு பல ஆண்டுகள் ஒரே மாதிரி இருக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். உதாரணமாக, செயற்கை நுண்ணறிவு போன்ற வளர்ந்து வரும் தகவல்கள் இடம் பெற வேண்டும்’’ என்றனர்.
The post ஆண்டுதோறும் ஆய்வு செய்து பாடபுத்தகங்கள் புதுப்பிக்க கல்வி அமைச்சகம் உத்தரவு appeared first on Dinakaran.