×

சித்திரை மாத பிரம்மோற்சவத்தையொட்டி திருத்தேரில் ஸ்ரீதேவி – பூதேவியுடன் எழுந்தருளிய அஷ்டபுஜ பெருமாள்: திரளான பக்தர்கள் தரிசனம்

காஞ்சிபுரம்: கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பல்வேறு திவ்ய தேசங்களும் மற்றும் பரிகார தலங்களும் அமைந்துள்ளது. இதில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான பரமபத வாசல் கொண்ட திருத்தலமான புஷ்பவல்லி தாயார் சமேத அஷ்டபுஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் நிர்வாகம் சார்பில் பிரம்மோற்சவம் விழா நடத்த முடிவு செய்யப்பட்டு, கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு மகா கும்பாபிஷேகத்திற்கு பிறகு இந்த வருடம் நடைபெறுகிறது.

அதன்படி, கடந்த வாரம் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினையொட்டி, தினமும் காலை, மாலை இரு வேளையும் அஷ்டபுஜ பெருமாளுக்கு, சிறப்பு பூஜைகள், அபிஷேகம் தீபாரதனைகள் காண்பிக்கப்பட்டு, மலர் அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

உற்சவத்தின் 7ம் நாளான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதில், அஷ்டபுஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு நீலநிற பட்டு உடுத்தி திருஆபரணங்கள் அணிந்து ராஜ அலங்காரத்தில், ஸ்ரீதேவி – பூதேவியுடன் தேர் உற்சவத்தில் எழுந்தருளி கோயிலில் இருந்து புறப்பட்ட கருடசேவை ரங்கசாமி குளம், டி.கே.நம்பி தெரு, செட்டி தெரு, அஷ்டபுஜ பெருமாள் கோயில் மாடவீதி வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

விநாயகர் கோயில் : காஞ்சிபுரம் – வந்தவாசி சாலையில் கூழமந்தல் மைதானத்தில் அமைந்துள்ள நட்சத்திர விநாயகர் கோயிலில் சித்திரை பெருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. ஸ்ரீ நட்சத்திர விருட்ச விநாயகர், ஸ்ரீ விசாலாட்சி சமேத கங்கைகொண்ட சோழீஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி – பூதேவி சமேத ஸ்ரீ பேசும் பெருமாள் ஆகியோருக்கு அபிஷேகம் மற்றும் திருமஞ்சனம் நடைபெற்றது.

இதில் நட்சத்திர விருட்ச விநாயகர் மூஷிக வாகனத்திலும், விசாலாட்சி சமேத கங்கைகொண்ட சோழீஸ்வரர் ரிஷப வாகனத்திலும், ஸ்ரீதேவி – பூதேவியுடன் பேசும் பெருமாள் கருட வாகனத்திலும் ஊர்வலமாக உற்சவம் நடைபெற்று மைதானத்திற்கு வந்தடைந்தனர். அங்கு உற்சவ மூர்த்திகளுக்கு, 16 வகையான நறுமண பொருட்களால் விசேஷ அபிஷேகமும், மலர்களால் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

விநாயகப் பெருமான் தாய் தந்தை உள்ள அம்பாள் சிவபெருமான் மற்றும் பெருமாள் ஆகியோர்களை வலம் வந்து ஆசீர்வாதம் பெற்று கஜமுக அசுரனை வதம் செய்யும் உன்னத நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து, விழாவின் நிறைவாக மகா தீபாராதனை, வாணவேடிக்கையை தொடர்ந்து, திருவீதி உலாவும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆதிகேசவப் பெருமாள் கோயில் :
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் மற்றும் ஸ்ரீ ராமானுஜர் கோயிலில் இந்தாண்டு சித்திரை பிரம்மோற்சவ விழா கடந்த 23ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 6 நாட்களாக ஆதிகேசவ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் தங்க பல்லக்கு, புஷ்பப் பல்லக்கு, சிம்ம வாகனம், குதிரை வாகனம், கேடயம் போன்றவற்றில் எழுந்தருளி வீதிஉலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இந்நிலையில், பிரம்ம உற்சவத்தின் 7ம் நாளான நேற்று தேரோட்ட விழா நடைபெற்றது. இதில், ஆதிகேசவ பெருமாள் – ஸ்ரீதேவி, பூதேவிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் “கோவிந்தா, கோவிந்தா” என பக்தி முழக்கமிட்டு வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர்.

* நித்ய கல்யாண பெருமாள் கோயில் :
மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் பிரமோற்சவ விழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும், சிம்ம வாகனம், சிறிய திருவடி, புன்னையடி, யானை வாகனம், கருட சேவை நடத்தி நித்ய கல்யாண பெருமாள் ஸ்ரீதேவி – பூதேவியுடன் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதைதொடர்ந்து, 7ம் நாளான நேற்று ஸ்ரீதேவி – பூதேவியுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி, நித்ய கல்யாண பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தந்தார்.

இதில், உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் வழிபட்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை செயல் அலுவலர் சரவணன் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தார். மாமல்லபுரம் டிஎஸ்பி ரவி ஆபிராம் மேற்பார்வையில், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில், எஸ்ஐ திருநாவுக்கரசு மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post சித்திரை மாத பிரம்மோற்சவத்தையொட்டி திருத்தேரில் ஸ்ரீதேவி – பூதேவியுடன் எழுந்தருளிய அஷ்டபுஜ பெருமாள்: திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Brahmotsavam ,Ashtabhuja ,Sridevi ,Bhudevi ,Tiruther ,Kanchipuram ,Divya Desams ,Pushpavalli Taiar Sametha ,Ashtabhuja Perumal Temple ,Parampada ,Ashtabhuja Perumal ,Sridevi – ,Budevi ,Thiruther ,Chitrai ,
× RELATED தட்சிணாயன புண்ணியகாலத்தையொட்டி இன்று...