காஞ்சிபுரம்: தமிழ்நாட்டை பொறுத்தவரை கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அக்னி நட்சத்திரம் வருவதற்கு முன்பாகவே இந்தாண்டு பல மாவட்டங்களில் வெப்ப அலை காரணமாக தினசரி வெயில் சதம் அடிக்கிறது. பகலில் மட்டுமல்லாது இரவு நேரங்களிலும் வெப்ப நிலை மிக அதிகமாக உயர்ந்து காணப்படுகின்றன. இதன் காரணமாக மக்கள் வெளியே செல்லமுடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழலும் நிலவுகிறது.
இப்படி முடங்கி கிடப்பதால் மின்விசிறி, ஏசி உள்ளிட்ட மின்சாதன பொருட்களின் பயன்பாடு மிகவும் அதிகரித்து வருகின்றன. மேலும், வீட்டிலேயே இருப்பதால் அதிகப்படியான தொலைக்காட்சி பயன்பாடு, பிரிட்ஜ் உள்ளிட்ட குளிர்சாதன பெட்டிகளின் தேவையும் பன்மடங்காக அதிகரித்துள்ளது. இதுதவிர, மின்சார வாகனங்களை வைத்திருப்போர் அதிகளவில் மின்சாரத்தை பயன்படுத்துவதால் மின் தேவை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதன்படி, சமீபத்தில் தமிழகத்தின் மின் தேவை என்பது 20 ஆயிரம் மெகா வாட்டாகவும், மின் பயன்பாடு 451.76 மில்லியன் யூனிட் என்ற புதிய உச்சதை எட்டியுள்ளது. இதனால் தமிழகத்தில் போதுமான அளவு மின் உற்பத்தி செய்யப்பட்டாலும், விநியோகத்தில் ஏற்படும் சிக்கலால் மின் தடை போன்ற பிரச்னைகள் உண்டாவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றன. தற்போது கோடைகாலத்தில் ஏற்படும் மின் தொடர்பான சிக்கல்களை தீர்க்கும் வண்ணம் தலைமைச்செயலாளர் சிவ் தாஸ் மீனா தலைமையில் மின்சாரத்துறை சார்ந்த உயரதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்டது.
அதில், தமிழகத்தில் இவ்வளவு மின் தேவை இருந்தாலும் இந்தாண்டில் மின்வெட்டு, மின் பற்றாக்குறை ஆகியவை இல்லாமல் இருக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுபோல், அரசு தரப்பில் ஒருபுறம் மின் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வுகள் எடுக்கப்பட்டாலும், பொதுமக்களும் தங்களின் பங்கிற்கு கோடை காலத்தில் மின் சாதனங்களை முறையாக பயன்படுத்துவதன் மூலம் மின்சார பயன்பாட்டை குறைத்து மின் கட்டணம் செலவை கட்டுப்படுத்தலாம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவை பின்வருமாறு:
* கோடைகாலத்தில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவது ஏசியில் தான். சில வருடங்களுக்கு முன்பு வாங்கப்பட்ட ஏசிகளில் இன்வெர்ட்டர் தனியாக இருக்கலாம். இதனால் கூடுதல் மின்சாரம் தேவைப்படும். அதேபோல வெண்டிலேட்டர்களில் தூசி படிந்து பேன் சிரமப்பட்டு சுற்றும்போதும் கூடுதல் மின்சாரம் செலவாகும். இதனால் தேவைப்பட்டால், புதிய இன்வெர்ட்டருடன் கூடிய புதிய ஏசியை வாங்கிக்கொள்ளலாம்.
* ஒரு வீட்டின் மொத்த மின் நுகர்வில் 15 விழுக்காடு குளிர்சாதனப்பெட்டிக்கு (பிரிட்ஜ்) செல்கிறது. இதனால் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குளிர்சாதன பெட்டியைச் சுற்றி காற்றோட்டம் அதிகம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் எளிதாக அதற்கு காற்று நுகர்வு கிடைக்கும். இதனால், அதன் தொழில்நுட்பங்களுக்கு செல்லும் மின்சாரம் குறையும். அதேபோல சுவரில் இருந்து குறைந்தது 2 அங்குல தூரத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக நேரடி சூரிய ஒளியில் படும்படி பிரிட்ஜை வைக்காதீர்கள்.
* அனைத்து ஏசிகளும் டைமருடன் வருகின்றன. ஆகவே, இரவு முழுவதும் ஏசியை பயன்படுத்தும்போது, அதிகாலையில் அணையும்படி டைமரை செட் செய்துகொள்ளுங்கள். அந்த நேரத்தில் இயல்பாகவே குளிராக இருக்கும். ஏசி தேவைப்படாது. இதன் மூலம் ஒரு நாளைக்கு 2, 3 மணிநேரம் ஏசி பயன்பாட்டை தவிர்க்க முடியும். அந்த நேரத்திலும் குளிர் காற்று தேவைப்பட்டால், மின் விசிறியை பயன்படுத்தாலம்.
* ஏசியை அதிக எண்ணுடன் பயன்படுத்தும்போது இயல்பாகவே மின்சார பயன்பாடு அதிகரிக்கும். நீங்கள் கதவு மற்றும் ஜன்னல்களை திறந்து வைத்திருந்தால், உங்களுக்கு தெரியாமல் எண்ணை கூட்டுவீர்கள். ஆகவே, இதை கவனத்தில் கொண்டு கதவு மற்றும் ஜன்னல்களை மூட வேண்டும்.
* கோடை காலங்களில் வாஷிங்மிஷினில் துவைக்கும் பகுதியை மட்டும் பயன்படுத்தலாம். துணிகளை உலத்த ‘டிரையரை’ குளிர் அல்லது மழை காலங்களில் மட்டும் உபயோகப்படுத்தும் போது மின்சாரம் மிச்சமாகும்.
* வீடுகளில் கணினியை பயன்படுத்தும் சமயங்களில் நீண்ட நேரம் ஸ்கிரீன் சேவர் மோடில் வைப்பதால் பன்மடங்கு மின்சாரம் செலவு ஆவதாக அறியப்படுகிறது.
* அறைகளை விட்டு வெளியே செல்லும்போது விளக்குகள், மின்விசிறிகள், தொலைக்காட்சி, கணினி உள்ளிட்ட மின் சாதனங்களின் இயக்கத்தை நிறுத்திவிட்டு வெளியே செல்வது நல்லது.
* வீடுகளில் உள்ள அறைகளில் எல்.இ.டி அல்லது சி.எப்.எல் பல்புகளை பயன்படுத்தலாம். இதனால் கணிசமான குறைந்த மின்சாரத்தை எடுத்துக்கொள்வதுடன் குறைந்த வெப்பத்தை உருவாக்கி ஒளியை தருகின்றன.
* பழைய டிவியை மாற்ற வேண்டும் என நினைப்பவர்கள் புதிதாக எல்.இ.டி அல்லது ஓ.எல்.இ.டி டிவிகளை வாங்கலாம்.
* மின் உபகரணங்கள் வாங்குவோர் தரமான ஐ.எஸ்.ஐ முத்திரையுடன் கூடிய பொருட்களை வாங்கினால் அது மின்சாரத்தை சேமிக்க வழிவகுக்கும்.
இவ்வாறு பல்வேறு நிலைகளில் மின்சாதன பொருட்களை பராமரிப்பதன் மூலமாகவும், அதனை தேவையின்றி சிக்கனமாக பயன்படுத்தினாலும் மின்சார்ந்த பிரச்னைகளை தவிர்த்து கோடைகாலத்திலும் மின்கட்டணத்தை குறைந்த அளவில் செலுத்த முடியும் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
The post கோடையில் மின்சாரத்தை மிச்சம் செய்து மின் கட்டணத்தை குறைக்க சில டிப்ஸ்: நிபுணர்கள் தகவல் appeared first on Dinakaran.