திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அருகே கால்வாய் ஓரம் மர்மமான முறையில் 7 வயது சிறுமியின் சடலம் புதைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பிரேத பரிசோதனை செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்பாக்கம் அடுத்த பூந்தண்டலம் கிராத்தில் உள்ள பக்கிங்காம் கால்வாய் ஓரத்தில் ஒரு சடலம் புதைக்கப்பட்டது போல தெரிந்ததைக் கண்டு சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் பூந்தண்டலம் கிராம நிர்வாக அலுவலர் விஜய் ஆனந்திற்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் ராஜேஸ்வரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் வட்டாட்சியரின் உத்தரவுப்படி சதுரங்கப்பட்டினம் போலீசாரின் உதவியுடன் அந்த சந்தேகத்திற்கு இடமான வகையில் புதைக்கப்பட்டிருந்த சடலத்தை மருத்துவ குழுவினரைக் கொண்டு புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி பார்த்தனர். அப்போது சுமார் 7 வயது மதிக்கத்தக்க சிறுமி உடல் புதைக்கப்பட்டு அழுகிய நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் புதைக்கப்பட்டிருந்த அதே இடத்திலேயே செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் மணிகண்ட ராஜி தலைமையில் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உடல் பாகங்கள் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது. புதைக்கப்பட்ட சிறுமி இறந்து சுமார் 3 நாட்களுக்கு மேலாக இருக்கலாம் என்று மருத்துவ குழுவினர் தெரிவித்தனர். மேலும் சதுரங்கப்பட்டினம் போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, புதைக்கப்பட்ட சிறுமி யார், அவருடைய குடும்பத்தினர் யார் என்ற பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் இறந்த சிறுமி மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த சத்யராஜ் என்பவரது மகள் ஜனனி (7) என்பதும், உடல்நிலை சரியில்லாமல் இறந்து போனதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. சம்பவ இடத்திற்கு செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத் மற்றும் மாமல்லபுரம் டிஎஸ்பி ரவி அபிராம் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
சிறுமி புதைக்கப்பட்ட இடத்திற்கு சற்று அருகாமையில் மதுபாட்டில்கள் மற்றும் நெருப்பு மூட்டி ஏதோ சமைத்து சாப்பிட்டதற்கான தடயங்கள் இருந்தன. ஒரு வேலை மது போதையில் யாராவது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து புதைத்திருப்பார்களோ என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
The post கல்பாக்கம் அருகே பரபரப்பு மர்மமான முறையில் 7 வயது சிறுமி சடலம் புதைப்பு: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.