×

குறுவை சாகுபடிக்கு ஏக்கருக்கு 40 மூட்டைகள் கொள்முதல் செய்ய வேண்டும்: விவசாயிகள் கூட்டத்தில் தீர்மானம்

செங்கல்பட்டு: குறுவை சாகுபடிக்கு ஆகஸ்ட் மாதம் முதல் ஒரு ஏக்கருக்கு 40 மூட்டைகள் கொள்முதல் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பாலாற்று படுகை விவசாயிகள் முன்னேற்ற சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் பிர்கா பாலாற்று படுகை விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் வில்லியம்பாக்கம் பகுதியில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

தலைவர் தனசேகரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் செயலாளர், பொருளாளர் என முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான விவசாயிகளும் கலந்துகொண்டனர். பாலூர் பிர்காவுக்கு உட்பட்ட வில்லியம்பாக்கம், ரெட்டிபாளையம், கொங்கனாஞ்சேரி, கொளத்தாஞ்சேரி, மேலச்சேரி, தேவனூர், ஆத்தூர், திம்மாவரம், ஆகிய கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்க்கும் அதிகமான ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர்.

ஆண்டிற்கு இரண்டு போகம் விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு வழக்கமாக ஒரு ஏக்கர் நெல் விவசாயம் செய்தால் 25 அல்லது 30 நெல் மூட்டைகள் கிடைக்கும். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு பாலாற்றில் கட்டப்பட்ட தடுப்பணை காரணமாகவும், சில மாதங்களுக்கு முன்பு பெய்த கன மழை காரணமாகவும், நெல் விவசாயத்திற்குத் தேவையான நீர் பாசனம் கிடைத்துள்ளது. இதனால், ஒரு ஏக்கக்கு 40 மூட்டைகள் நெல் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே, ஏக்கருக்கு 30 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்து வருகின்றது. குறுவை சாகுபடிக்கு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் ஒரு ஏக்கருக்கு 40 மூட்டைகளை மாவட்ட நிர்வாகம் கொள்முதல் செய்ய வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், விவசாயிகளுக்கு கூடுதலாக நீர் கிடைக்க செங்கல்பட்டு மகாலட்சுமி நகரில் உள்ள நீஞ்சல் மதகு வெள்ள பெருக்கின் போது திறக்கப்பட்டது. தற்போது வரை மூடாமல் உள்ளது. அதை உடனே மூட வேண்டும்.

அதே போல் நீஞ்சல் மதகை அகலப்படுத்தி தூர் வார வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வைத்துள்ள விவசாயிகளுக்கு உடனே இழப்பீடு வழங்க வேண்டும். காட்டு பன்றி தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வடகால் பகுதியில் உள்ள ஏரியில் கலங்கல் அமைக்க வேண்டும். நெல் மூட்டைகளை இருப்பு வைக்க குடோன் அமைத்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post குறுவை சாகுபடிக்கு ஏக்கருக்கு 40 மூட்டைகள் கொள்முதல் செய்ய வேண்டும்: விவசாயிகள் கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Kurvai ,Chengalpattu ,Kuruvai ,Balattu Padukai Kiyala Munnetra Sangam ,Balaur Birka ,Chengalpattu District ,Dinakaran ,
× RELATED டெல்டா விவசாயிகளுக்கு நிவாரணம் அரசுக்கு எடப்பாடி கோரிக்கை