×
Saravana Stores

விசாரணை ஜூன் 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு: கொடநாடு கொலை வழக்கு மேலும் 4 பேருக்கு சம்மன்: சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை


ஊட்டி: நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் தேதி கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சோலூர் மட்டம் ேபாலீசார் சயான், வாளையார் மனோஜ் உட்பட கேரளாவை சேர்ந்த 10 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையே இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் விசாரணை நடந்து வருகிறது. சயான், வாளையார் ஜம்சீர் அலி, ஜித்தின் ஜாய், தீபு உட்பட 10 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், சசிகலா, முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி உட்பட இதுவரை 316 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க கொடநாடு எஸ்டேட்டில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் டிரைவர் ரமேஷ், காய்கறிகளை கொடுத்து வந்த தேவன், கோவையை சேர்ந்த ரவிக்குமார் மற்றும் அப்துல்காதர் ஆகிய 4 ேபருக்கு புதியதாக சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். 4 பேரும் இன்று (30ம் தேதி) கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்த வழக்கு நேற்று மீண்டும் ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. குற்றவாளிகள் தரப்பில் வாளையார் மனோஜ் மட்டும் ஆஜராகினார். அப்போது அரசு தரப்பு வக்கீல் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் நீதிபதி முன் ஆஜராகி, ‘‘கொடநாடு எஸ்டேட்டில் நிபுணர் குழு மேற்கொண்ட ஆய்வு குறித்த அறிக்கையை எதிர் தரப்பு வக்கீல்கள் கேட்டுள்ளனர். அந்த அறிக்கை அவர்களுக்கு வழங்குவது குறித்து முடிவு செய்ய கால அவகாசம் அளிக்க வேண்டும்’’ என்றனர். இதனைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் ஜூன் மாதம் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தி வைக்கப்பட்டது.

The post விசாரணை ஜூன் 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு: கொடநாடு கொலை வழக்கு மேலும் 4 பேருக்கு சம்மன்: சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : CBCID ,Kodanad Estate ,Nilgiri District ,Kerala ,Solur Mattam Epalesar Sayan ,Valaiyar Manoj ,Dinakaran ,
× RELATED கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு...