காஞ்சிபுரம்: கோடை வெப்ப நோய்களை எதிர்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கலெக்டர் கலைச்செல்வி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்து மருத்துவமனையின் இணை இயக்குநர் மற்றும் மருத்துவர்களிடம் அவர் கேட்டறிந்தார். காஞ்சிபுரம் ரயில்வே சாலை பகுதியில் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இந்த மருத்துவமனையில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பல்வேறு விதமான நோய்களுக்காக உள் நோயாளிகளாகவும், வெளி நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தின் முக்கிய மருத்துவமனையாக செயல்படும் இந்த மாவட்ட அரசு மருத்துவமனைமீது அவ்வப்போது புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு நேற்று நேரில் சென்று திடீர் ஆய்வினை மேற்கொண்டார்.
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் புறநோயாளிகள் அனுமதி சீட்டு வழங்குமிடத்திற்குச் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, மருத்துவமனையில் மருந்துகளின் இருப்பு விவரங்கள் மற்றும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்து இணை இயக்குநர் மற்றும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். வரும் நாட்களில் கோடை வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால் கோடை வெப்ப நோய்களை எதிர்கொள்ள தேவையான மருந்துகளை கையிருப்பு வைத்துக் கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தினார்.
மருத்துவமனை சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொண்டு, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு விரைவான சிகிச்சை வழங்கிடுமாறும் கேட்டுக் கொண்டார். இந்த ஆய்வின்போது மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் கோபிநாத் மற்றும் அரசு மருத்துவமனை டாக்டர்களும், ஊழியர்களும் உடனிருந்தனர்.
இதனை தொடர்ந்து கலெக்டர் கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு ராஜ வீதியில் செயல்படும் நியாய விலைகடைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு வழங்க அங்கு வைக்கப்பட்டுள்ள அரிசி, சர்க்கரை, சமையல் எண்ணெய், உப்பு மற்றும் பருப்பு வகைகளின் இருப்பு மற்றும் அதன் தரத்தினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். மேலும் பொருட்கள் வாங்க வந்த பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்ததோடு, இருப்பு பதிவேட்டில் உள்ள இருப்பு விவரங்களை கலெக்டர் சரிபார்த்தார். மாவட்ட மருத்துவமனை வளாகத்திலும், நியாய விலை கடை பகுதியிலும் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
The post கோடை வெப்ப நோய்களை எதிர்கொள்ள நடவடிக்கை மாவட்ட தலைமை மருத்துவமனையில் காஞ்சிபுரம் கலெக்டர் திடீர் ஆய்வு: சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்தார் appeared first on Dinakaran.