- மாத்தூர் வெப்ப மின் நிலையம்
- மேட்டூர்
- மேட்டூர் அனல் மின் நிலையம்
- மேச்சேரி
- ஜெயக்குமார்
- சேலம் மாவட்டம்
- மாத்தூர் தெர்மல் பவர் ஸ்டேஷன் அபார
- மேட்டூர் தெர்மல்
மேட்டூர்: மேச்சேரி அருகே இன்று அதிகாலை புளிய மரத்தில் கார் மோதிய விபத்தில் மேட்டூர் அனல் மின் நிலைய தொழிலாளர் நல அலுவலர் மற்றும் மகன் பலியாகினர். சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின்நிலைய குடியிருப்பை சேர்ந்தவர் ஜெயக்குமார். மேட்டூர் அனல் மின் நிலையத்தில் உதவி செயற்பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி தமிழரசி (53). இவர் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் தொழிலாளர் நல அலுவலராக பணிபுரிந்து வந்தார். இவர்களது மகன் புகழ்ஒளி (22). கோவை தனியார் கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பு இறுதி ஆண்டு படித்து வந்தார்.
இதனிடையே தமிழரசியின் உறவினர் ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்க அவரை தமிழரசியும், அவரது மகன் புகழ் ஒளியும் நேற்று காரில் அழைத்து வந்தனர். சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்த பிறகு நள்ளிரவில் சேலத்திலிருந்து மேட்டூர் நோக்கி புறப்பட்டனர். அப்போது தமிழரசியின் கணவர் ஜெயக்குமார் செல்போனில் தொடர்பு கொண்டு, சேலத்தில் உள்ள உறவினர் வீட்டில் இரவில் தங்கி இருந்து விட்டு காலையில் வரும்படி கூறியுள்ளார். ஆனால் தமிழரசியும் அவரது மகனும் அதனை கேட்காமல் நள்ளிரவில் காரில் மேட்டூர் நோக்கி புறப்பட்டு வந்தனர்.
மேச்சேரி அருகே உள்ள பொட்டனேரி நான்கு ரோட்டில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் வேகமாக வந்து கொண்டிருந்தபோது நிலை தடுமாறிய கார் அருகில் இருந்த புளிய மரத்தில் பலமாக மோதியது. கார் புளிய மரத்தில் மோதிய சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அவர்கள் இடிபாடுகளில் சிக்கிய 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கார் விபத்தில் சிக்கிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்த போது, இடிபாடுகளில் சிக்கி போராடிக்கொண்டிருந்த புகழ்ஒளி, முதலில் தனது தாயை காப்பாற்றுமாறு கூறி உள்ளார்.
இதனிடையே மேட்டூர் அரசு மருத்துவமனையில் தமிழரசியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதை உறுதி செய்தனர். புகழ்ஒளிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது சடலம் மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக மேச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் தாய், மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
The post புளிய மரத்தில் கார் மோதல்; மேட்டூர் அனல் மின்நிலைய பெண் அதிகாரி, மகன் பலி appeared first on Dinakaran.