கோபால்கஞ்ச்: பீகாரில் தேர்தல் பணிக்கு சென்ற போலீஸ் பேருந்து விபத்தில் சிக்கியதால் 3 போலீசார் பலியாகினர். 15 போலீசார் காயமடைந்தனர். பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டம் சித்வாலியா என்ற இடத்தில் அமைந்திருக்கும் சாலையோர தாபா அருகே, மூன்று போலீஸ் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அவ்வழியாக சென்ற கன்டெய்னர் லாரி ஒன்று, நின்றிருந்த போலீஸ் பேருந்தின் மீது மோதியதில் 3 போலீஸ் கான்ஸ்டபிள்கள் பலியாகினர் மற்றும் 15 போலீசார் காயமடைந்தனர்.
சம்பவம் குறித்து கோபால்கஞ்ச் எஸ்பி ஸ்வர்ன் பிரபாத் கூறுகையில், ‘கோபால்கஞ்சிலிருந்து சுபால் வாக்குச் சாவடிக்கு மூன்று பேருந்துகளில் 108 போலீசார் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் சாலையோர தாபா அருகே பேருந்துகளை நிறுத்தி வைத்திருந்தனர். அவ்வழியாக சென்ற லாரி ஒன்று பேருந்தில் மோதியதில், சம்பவ இடத்திலேயே இரண்டு போலீசார் உயிரிழந்தனர்.
மூன்றாவது போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காயமடைந்த 15 போலீசாரும் ககாரியா சதார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பீகார் போலீஸ் நிதியில் இருந்து இறந்த மூன்று போலீசாருக்கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றார்.
The post தேர்தல் பணிக்கு சென்றபோது 3 போலீசார் பலி; 15 பேர் காயம்: நின்றிருந்த பஸ் மீது லாரி மோதி சோகம் appeared first on Dinakaran.