சென்னை: வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையில் இருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்கு அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை போக்குவரத்து போலீசாருக்கு ஐகோர்ட் வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சொந்த வாகனங்களில் ஊடகம், காவல்துறை, நீதித்துறை, வழக்கறிஞர் என ஸ்டிக்கர் ஒட்டினால் மோட்டார் வாகன சட்டத்தின் 198-வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை போக்குவரத்து போலீசார் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அது இன்று அனைத்து செய்திகளிலும் வெளியாகியுள்ளது.
இந்த அறிவிப்பில், வழக்கறிஞர்கள் பற்றிய குறிப்பை திரும்ப பெற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. குறிப்பாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் கிருஷ்ணகுமார், துணை தலைவர் அறிவழகன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பாக வழக்கறிஞர்களுக்கு அவர்களது பதிவு எண்ணுடன் கூடிய வழக்கறிஞர்களுக்கான ஸ்டிக்கர் வழங்கப்படுவதாகவும், நடைபாதையில் விற்கப்படும் வழக்கறிஞர் ஸ்டிக்கரை வாங்கி சிலர் தவறாக பயன்படுத்தலாம் என தெரிவித்திருக்கிறார்கள்.
மேலும் போக்குவரத்து போலீஸ் தரப்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குறிப்பிட்டுள்ள சட்டப்பிரிவு குறைபாடான நம்பர் பிளேட் சம்பந்தப்பட்டது; அது ஸ்டிக்கருக்கு பொருந்தாது என்றும் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்கள். அதனால், சரியான சட்டப் பிரிவை குறிப்பிடும்படியும், வழக்கறிஞர்கள் பற்றி அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ள குறிப்பை திரும்ப பெற வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளனர்.
The post வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையில் இருந்து விலக்கு அளிக்குமாறு போக்குவரத்து போலீசாருக்கு ஐகோர்ட் வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை..!! appeared first on Dinakaran.