×
Saravana Stores

கிறுகிறுக்க வைக்குது கோடை வெயில் சூட்டை தணிக்கும் எலுமிச்சை விலை சூடுபிடித்தது

*கம்பம் உழவர் சந்தையில் கிலோ ரூ.150க்கு விற்பனை

கூடலூர் : வெயிலின் தாக்கத்தால் எலுமிச்சை பயன்பாடு அதிகரித்துள்ளதால், எலுமிச்சை விலை ஆப்பிள் விலையை தாண்டியது. கம்பம் உழவர் சந்தையில் கிலோ ரூ.150க்கும், வெளிமார்க்கெட்டில் கிலோ ரூ 200 மற்றும் 220 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.தொற்று நீக்கியாகவும், நஞ்சு முறிப்பு மருந்தாகவும் பயன்படுத்தப்பட்ட எலுமிச்சை தற்போது பல்வேறு பானங்கள் தயாரிக்கவும், ஊறுகாய் போன்றவை தயாரிக்கவும் பயன்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை மற்றும் தாண்டிக்குடி, தேனி மாவட்டம் போடி பகுதிகளில் எலுமிச்சை விவசாயம் நடைபெறுகிறது. விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் கொடுத்துக் கொண்டிருக்கும் பயிர்களில் எலுமிச்சையும் ஒன்று. இவ்வளவு சிறப்புமிக்க எலுமிச்சை விவசாயத்தில் கடந்த சில மாதங்களாக மழை இல்லாததால், வரத்து மிகவும் குறைந்து காணப்படுகிறது.

மேலும் தற்போது, கோடைகாலமாதலால் எலுமிச்சையின் பயன்பாடும் அதிகரித்தள்ளதால் எலுமிச்சையின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. விலை உயர்வினால் எலுமிச்சம் பழத்தை பிஞ்சிலே பறிக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் கம்பம் உழவர் சந்தையில் கிலோ ரூ150&க்கும், இங்குள்ள வெளி மார்கெட் கடைகளில் எலுமிச்சை கிலோ ரூ.200 முதல் ரூ 220 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. உழவர்சந்தையில் கிலோ 150 ரூபாய் என்பதால், உழவர்சந்தைக்கு எலுமிச்சை வரத்து குறைவாகவே உள்ளது. வியாபாரிகள் வெளிச்சந்தையிலே அதிக அளவு விற்பனை செய்கின்றனர்.

இதுகுறித்து எலுமிச்சை வியாபாரி ஒருவர் கூறுகையில், வரத்து குறைவால் எலுமிச்சை விலை உயர்ந்துள்ளது. விவசாயிகளிடமிருந்து கிலோ 90 முதல் 120 ரூபாய்வரை கொள்முதல் செய்யும் இடைத்தரகர்கள் வியாபாரிகளுக்கு கிலோ ரூபாய் 130 முதல் ரூ 150 வரை விலையில் தருகின்றனர். நாங்கள் வியாபாரிகள் வாங்கி, செலவு செய்து கொண்டு வந்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். இதில் விவசாயிகளையும், வியாபாரிகளையும் விட அதிக லாபம் பெறுவது இடைத்தரகர்கள் மட்டும்தான் என்றார்.

உடலுக்கு நல்லது ஊட்டச்சத்துக்கள் நிறைந்த எலுமிச்சை நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அவை நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றன, இதய நோய் அபாயத்தை குறைக்கின்றன, சிறுநீரக கற்களைத் தடுக்கின்றன. எலுமிச்சை சாறு சிறந்த புத்துணர்ச்சி தரும் பானமாகும். எலுமிச்சம் பழச்சாற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் நம் உடல் ஆரோக்கியத்திற்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். எலுமிச்சை சாறில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.

இது ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. இது தொண்டையை சுத்தப்படுத்துகிறது மற்றும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. தொண்டை வலி இருந்தால், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

The post கிறுகிறுக்க வைக்குது கோடை வெயில் சூட்டை தணிக்கும் எலுமிச்சை விலை சூடுபிடித்தது appeared first on Dinakaran.

Tags : Kambam ,Farmers' Market ,Kambam farmers ,market ,
× RELATED கம்பம் அருகே மின் கம்பங்கள் மீது மரம் சாய்ந்ததால் பரபரப்பு