×
Saravana Stores

கோடை விடுமுறை தினத்தையொட்டி கள்ளக்குறிச்சி நகராட்சி ஏமப்பேர் சிறுவர் பூங்காவில் குவிந்த சிறுவர்கள், பொதுமக்கள்

*நீச்சல் அடித்தும், படகு சவாரி செய்தும் மகிழ்ச்சி

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நகராட்சி ஏமப்பேர் பகுதியில் பழமை வாய்ந்த குளம் சுமார் 4.50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது நகராட்சி நிர்வாகம் சார்பில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டது. இதில் பூங்கா, படகு சவாரி 5, சிறுவர் நீச்சல் குளம்-2, சிறிய மலை அருவி, நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை, சிறுவர்கள் விளையாடி மகிழும் வகையில் 4 ஊஞ்சல்கள், சிறுவர்கள் விளையாடும் வகையில் சறுக்கல் ஆகியவையுடன் அமைக்கப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் 16ம் தேதி பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் திறக்கப்பட்டது.

இதையடுத்து பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் தினந்தோறும் காலை, மாலை நேரங்களில் பொழுதுபோக்கும் வகையில் படகு சவாரி மற்றும் சிறுவர் நீச்சல் குளம், ஊஞ்சல், சிறிய மலை அருவி ஆகியவையில் விளையாடி மகிழ்ந்து வருகின்றனர். இதில் நுழைவு கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.10, இருசக்கர வாகனம் நிறுத்த ரூ.5, சிறுவர் நீச்சல் குளத்தில் குளிப்பதற்கு ஒரு நபருக்கு அரை மணி நேரத்துக்கு ரூ.25, படகு சவாரியில் பயணம் செய்ய அரை மணி நேரத்துக்கு ஒரு படகில் 4 பேர் பயணம் செய்திட ரூ.100 கட்டணம் நிர்ணயம் செய்து வசூல் செய்யப்படுகிறது.

தற்போது பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டதால் கோடை விடுமுறையை கொண்டாடும் வகையில் நேற்று சுமார் 1,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பூங்காவுக்கு வருகை தந்து அங்கு விளையாடி மகிழும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் நீச்சல் குளத்தில் சிறுவர்கள் குதித்து வெயிலின் தாக்கத்தை மறந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாடினர். மேலும் படகு சவாரியில் 4 பேர் பயணம் செய்யக்கூடிய வகையில் 5 படகு சவாரியில் மக்கள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். சிறிய மலை அருவியின் உச்சியில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் ஏறி அமர்ந்து வெயிலின் தாக்கத்தை போக்கிடும் வகையில் அருவி தண்ணீரில் நனைத்து மகிழ்ந்தனர். மேலும் ஊஞ்சல்கள் மற்றும் சறுக்கல் ஆகியவைகளில் விளையாடியும் மகிழ்ந்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பொழுதுபோக்கிற்கு பார்க் வசதியோ, விளையாட்டு வகையான பொருட்கள் எதுவும் அமைக்கப்படாத நிலையில் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது தமிழக அரசு மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் முயற்சியால் பொதுமக்கள் பொழுதுபோக்கிற்கும், குழந்தைகள் விளையாடி மகிழும் வகையில் பூங்கா, படகு சவாரி, நீச்சல் குளம், சிறிய மலை அருவி, ஊஞ்சல்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளதால் அவைகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடும் வெயிலை சமாளிக்கும் இங்கு குவிந்து விளையாடி மகிழ்ந்து வருகின்றனர், என்றனர்.

குடிநீர் வசதி இல்லாததால் மக்கள் அவதி

கள்ளக்குறிச்சி ஏமப்பேர் சிறுவர் பூங்காவுக்கு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த சுமார் 20 கி.மீ. தூரத்தில் இருந்து தினந்தோறும் சிறுவர் முதல் பெரியவர்களை வரை அதிகபடியானோர் வருகை தந்து விளையாடி மகிழ்கின்றனர். இதனால் நகராட்சிக்கும் வருவாய் ஏற்படுகிறது.

தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் பூங்காவில் குடிநீர் வசதி இல்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் நலன் கருதி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post கோடை விடுமுறை தினத்தையொட்டி கள்ளக்குறிச்சி நகராட்சி ஏமப்பேர் சிறுவர் பூங்காவில் குவிந்த சிறுவர்கள், பொதுமக்கள் appeared first on Dinakaran.

Tags : Emapper Children's Park ,Kallakurichi Municipality ,Kallakurichi ,Kallakurichi municipality Emapper ,Kallakurichi Municipality Emapper Children's Park ,
× RELATED அரசு பள்ளியில் புறக்கணிப்பதாக கூறி...