×
Saravana Stores

30 ஆண்டுகளில் இல்லாத கடும் வறட்சி மணல் மேடாக மாறிய அணைகள்: மின்நிலையங்களில் உற்பத்தி பாதிப்பு

மஞ்சூர் : வரலாறு காணாத வறட்சியால் மாவட்டத்தில் பெரும்பாலான அணைகளும் வறண்டு நீரோடைகளாக காட்சியளிப்பதுடன் காட்டு குப்பை அவலாஞ்சி, உள்பட முக்கிய மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் 12 நீர் மின் நிலையங்கள் இயங்கி வருகிறது.அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, பைக்காரா, கிளன்மார்கன் உள்ளிட்ட பல்வேறு அணைகளில் தேக்கி வைக்கப்படும் நீரின் மூலம் மேற்படி மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதில் குந்தா மின்நிலையத்தில் 60 மெகாவாட், கெத்தை மின்நிலையத்தில் 175 மெகாவாட், பரளி மின் நிலையத்தில் 180 மெகாவாட், பில்லூர் மின்நிலையத்தில் 100 மெகாவாட், அவலாஞ்சி மின்நிலையத்தில் 40 மெகாவாட், காட்டுகுப்பை மின்நிலையத்தில் 30 மெகாவாட், சிங்காரா மின் நிலையத்தில் 150 மெகாவாட், பைக்காரா மின்நிலையத்தில் 59.2 மெகாவாட், பைக்காரா மைக்ரோ மின்நிலையத்தில் 2 மெகாவாட், முக்குருத்தி மைக்ரோ மின்நிலையத்தில் 0.70 மெகாவாட், மாயார் மின்நிலையத்தில் 36 மெகாவாட், மரவகண்டி மின்நிலையத்தில் 0.75 மெகாவாட் என மொத்தம் 833.65 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி தறின் உள்ளவையாக உள்ளது.

மாநிலத்தில் மொத்த மின்உற்பத்தியில் 10 சதவீதம் மின்சாரம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள நீர் மின்நிலையங்களில் மேற்கொள்ளப்படுகிறது. மின் தேவை அதிகமாக உள்ள ‘பீக் அவர்ஸ்’ எனப்படும் காலை மற்றும் மாலை நேரங்களின் மின் தேவையை மேற்படி நீர் மின்நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் மூலம் பூர்த்தி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் மின்நிலையங்களில் மின்சார உற்பத்திக்கு பின் மின் நிலையங்களில் இருந்து ெவளியேற்படும் தண்ணீரானது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதுடன் கோவை, ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய பவானி பாசனப்படுகை விவசாயிகளின் முக்கிய நீராதாரமாகவும் உள்ளது.

மேற்படி அணைகளுக்கு ஆண்டுதோறும் பெய்யும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை முக்கிய ஆதாரமாக உள்ளது. இந்நிலையில் கடந்தாண்டு பருவமழை போதிய அளவில் பெய்யாததால் அணைகளில் நீர் வரத்து குறைந்து போனது. இதனால் பெரும்பாலான மின் நிலையங்களிலும் அணைகளில் இருப்பில் இருந்த நீரின் அளவை பொருத்தே மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது.

இதை தொடர்ந்து நடப்பாண்டும் துவக்கம் முதல் இதுவரை மழை அறவே பெய்யாததால் கடும் வறட்சி ஏற்பட்டு நீர்வரத்து அடியோடு நின்று போயுள்ளது. தொடர் மின் உற்பத்தி மற்றும் குடிநீர் தேவை காரணமாக இருப்பில் இருந்த தண்ணீரும் குறைந்து பெரும்பாலான அணைகளும் தரை தட்டி காணப்படுகிறது. குறிப்பாக மஞ்சூர் அருகே உள்ள குந்தா அணைக்கு நீர்வரத்துள்ள பிகுளி, தொட்டஹள்ளா ஆறுகள் வறண்டு போயுள்ளது. இதனால் நீர் வரத்து அடியோடு பாதிக்கப்பட்டதால் குந்தா அணை முற்றிலுமாக வறண்டு ஒரு பகுதியில் சிறு நீரோடையும் பெரும்பகுதி மணல் மேடாகவும் காட்சியளிக்கிறது.

இதேபோல் அப்பர்பாவனி, அவலாஞ்சி, கெத்தை, பரளி, பில்லூர் உள்ளிட்ட அணைகளும் வறட்சியால் வறண்டு போயுள்ளது. அணைகளில் நீர் இல்லாதாதால் குந்தா, கெத்தை, பரளி, அவலாஞ்சி, காட்டு குப்பை மின்நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு சில மின்நிலையங்களில் மின்உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.
பைக்காரா மின் திட்டத்தின் கீழ் உள்ள ஒரு சில மின் நிலையங்களில் மட்டும் காலை மற்றும் மாலை நேரங்களில் குறிப்பிட்ட அளவில் மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதேபோல் எமரால்டு அணையிலும் நீர் இருப்பு பெருமளவு குறைந்ததால் அவலாஞ்சி நீர் பிடிப்பு பகுதியின் ஒரு பகுதியான இத்தலார் போர்த்தி அணை வறண்டு போயுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் வறட்சி நிலவி வருவதாகவும் தொடர்ந்து மழை பெய்யாமல் வறட்சி நீடிக்கும் பட்சத்தில் மின் நிலையங்களில் மின்சார உற்பத்தி கடுமையாக பாதிக்கும் அபாயம் உள்ளதுடன் சமவெளி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகமும் கடுமையாக பாதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

The post 30 ஆண்டுகளில் இல்லாத கடும் வறட்சி மணல் மேடாக மாறிய அணைகள்: மின்நிலையங்களில் உற்பத்தி பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Avalanchi ,Nilgiri district ,Upper Bhawani ,Emerald ,Dinakaran ,
× RELATED மழையால் அழுகியது: ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரம் அகற்றம்