×
Saravana Stores

30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடையும் வகையில் கண்டாச்சிபுரத்திலிருந்து கட் சர்வீஸ் முறையில் பல்வேறு பகுதிக்கு பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும்

*சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கண்டாச்சிபுரம் : விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது திருக்கோவிலூர் தாலுகாவில் இருந்து நிர்வாக வசதிக்காக கண்டாச்சிபுரத்தை தலைமையிடமாக கொண்டு கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கண்டாச்சிபுரம் தாலுகா உருவாக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கண்டாச்சிபுரத்தில் வட்டாட்சியர் அலுவலகம் அமைத்து முகையூர் மற்றும் அரகண்டநல்லூர் ஆகிய 2 குறுவட்டங்களை உள்ளடக்கி 62 வருவாய் கிராமங்களுடன் கண்டாச்சிபுரம் தாலுகா செயல்பட்டு வருகிறது. கண்டாச்சிபுரம் தாலுகா உருவாக்கப்பட்டதிலிருந்து 8 ஆண்டுகளாக தாலுகா அந்தஸ்துக்கு தேவையான மற்ற அரசு அலுவலகங்கள் அமைக்கப்படாமல் பொதுமக்கள் நாளுக்கு நாள் திருக்கோவிலூர், விழுப்புரம் என அலைக்கழிக்கப்படு வருகின்றனர்.

இந்நிலையில் கண்டாச்சிபுரம் தாலுகாவை சேர்ந்த மாணவ, மாணவிகள், முதியோர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசால் பெறப்படும் நலத்திட்டங்கள் மற்றும் உதவித்தொகை மற்றும் சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், மெய்தன்மை சான்றிதழ் போன்ற அனைத்து வகை சான்றிதழ் மற்றும் பட்டா மாற்றம் செய்யவும், ஆதார் அட்டை, குடும்ப அட்டை பெறுவது போன்ற பல்வேறு தேவைகளுக்காக கண்டாச்சிபுரம் வந்து செல்கின்றனர்.

மேலும் கண்டாச்சிபுரம் தாலுகாவை சேர்ந்த ஆற்காடு, சென்னகுணம், ஆயந்தூர், பரனூர் போன்ற பல்வேறு கிராம பொதுமக்கள் நேரடி பேருந்து வசதி இல்லாததால் அரகண்டநல்லூர், திருக்கோவிலூர் சென்று கண்டாச்சிபுரம் வந்து செல்கின்றனர். மேலும் ஆட்டோ மற்றும் இதர வாகனங்களில் அதிக கட்டணம் செலவழித்தும் வந்து செல்கின்றனர். இதனால் கூலித்தொழிலாளிகளுக்கு நாள் கணக்கில் வேலைகள் பாதிக்கப்பட்டு சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும் விக்கிரவாண்டி தாலுகா காணை ஒன்றியத்துக்குட்பட்ட நல்லாப்பாளையம், கடையம், கருவாட்சி, வெங்கமூர், உடையாநத்தம், பனமலைபேட்டை, வெள்ளையாம்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் கண்டாச்சிபுரத்துக்கு அருகில் 2 முதல் 10 கிலோ மீட்டர் தொலைவிலே உள்ளது. அந்தந்த கிராம பொதுமக்கள் தினந்தோறும் அன்றாட தேவைகளுக்கும், வெளியூர் செல்வதற்கும் கண்டாச்சிபுரம் வந்து செல்கின்றனர். தொடர்ந்து மேற்குறிப்பிட்ட காணை ஒன்றியத்தை சேர்ந்த பொதுமக்கள் கிராம வளர்ச்சியின் நிறை, குறைகள் குறித்து மனு அளிக்கவும், வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் பெறக்கூடிய நலத்திட்டங்களை பெறவும் நேரடி பேருந்து வசதியே இல்லாத காணை வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு விழுப்புரம் சென்று அங்கிருந்து காணைக்கு சென்று வருகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு கண்டாச்சிபுரம் தாலுகாவை சேர்ந்த பொதுமக்கள் முழுமையாக எந்த கஷ்டமும் இன்றி கண்டாச்சிபுரம் வந்து செல்லவும், காணை ஒன்றியத்தை சேர்ந்த மேற்குறிப்பிட்ட 10க்கும் கிராம பொதுமக்கள் பயனடையும் வகையில் தினமும் கண்டாச்சிபுரத்திலிருந்து மேல்வாலை, ஒடுவன்குப்பம், காரணை, ஆயந்தூர், ஆற்காடு வழியாக பையூர் வரையிலும், கண்டாச்சிபுரத்திலிருந்து முகையூர், சென்னகுணம், மாம்பழப்பட்டு, காணை வழியாக விழுப்புரத்துக்கும், கண்டாச்சிபுரத்திலிருந்து நல்லாப்பாளையம், கடையம், கருவாட்சி, பனமலைபேட்டை வழியாக அனந்தபுரம் வரையிலும், கண்டாச்சிபுரத்திலிருந்து ஒதியத்தூர், அத்தியூர் திருக்கை, கொசப்பாளையம், அன்னியூர் வழியாக கஞ்சனூர் வரையிலும் சுழற்சி முறையில் அரசு டவுன் பஸ்சை நாள் ஒன்றுக்கு 2 முறை இயக்க வேண்டும்.

மேலும், கண்டாச்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஏறத்தாழ 20க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் பயனடையும் வகையில் தினமும் பிற்பகல் நேரத்தில் கண்டாச்சிபுரத்திலிருந்து மழவந்தாங்கல், ஆலம்பூண்டி, செஞ்சி, திண்டிவனம் வழியாகவோ அல்லது கண்டாச்சிபுரம், அனந்தபுரம், செஞ்சி, தின்டிவனம் வழியாகவோ சென்னைக்கும் தொலைதூர பேருந்தை இயக்க வேண்டும்.

இதனை செயல்படுத்தும் பட்சத்தில் கண்டாச்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள மேற்படி வழித்தடங்களில் உள்ள சுமார் 30க்கும் மேற்பட்ட கிராம மாணவ-மாணவிகள், பெண்கள், முதியோர்கள் மற்றும் பொதுமக்கள் பயனடைவர். ஆகையால், கண்டாச்சிபுரம் தாலுகாவை உள்ளடக்கிய திருக்கோவிலூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

The post 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடையும் வகையில் கண்டாச்சிபுரத்திலிருந்து கட் சர்வீஸ் முறையில் பல்வேறு பகுதிக்கு பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Kandachipuram ,Tirukovilur taluk ,Villupuram ,Kallakurichi ,Dinakaran ,
× RELATED சி.வி.சண்முகம் திடீர் கைது