×
Saravana Stores

சாலை விரிவாக்கத்தால் அகற்றம் பேருந்து நிறுத்தங்களில் கொளுத்தும் வெயிலில் காத்திருக்கும் பயணிகள்

*விழுப்புரத்தில் தற்காலிக பயணிகள் நிழற்குடை தேவை

விழுப்புரம் : விழுப்புரம் நகரில் பிரதான சாலைகளில் விரிவாக்கம் பணியால் ஏற்கனவே இருந்த பயணிகள் நிழற்குடை இடித்து அகற்றப்பட்ட நிலையில் தற்போது கொளுத்தும் வெயிலில் பயணிகள் காத்திருக்கின்றனர். மழை காலங்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை, தற்காலிக பயணிகள் நிழற்குடை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

விழுப்புரம் நகரில் போக்குவரத்து நெரிசல் முக்கிய பிரச்னையாக இருந்து வந்தன. இதனால் பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் முதல் சென்னை புறவழிச்சாலை வரையிலும், அதே போல் சிக்னலில் இருந்து மாதா கோவில் பேருந்து நிறுத்தம் வரை சாலையின் இருபுறமும் அகலப்படுத்தப்பட்டன. இதற்காக காந்தி சிலை, சிக்னல், பிள்ளையார் கோயில் பேருந்து நிறுத்தம், மேல்தெரு பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் இருந்த பயணிகள் நிழற்குடை அகற்றப்பட்டன.

இவைகளில் மாதா கோவில், காந்திசிலை பகுதியில் மட்டும் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. குறிப்பாக விழுப்புரம் நகர நுழைவு வாயிலான காட்பாடி ரயில்வே கேட் அருகில் மேல்தெரு பகுதியில் இருபுறமும் பயணிகள் நிழற்குடை இல்லாததால் கொளுத்தும் வெயிலில் பயணிகள் காத்திருக்கின்றனர்.
சென்னை உள்ளிட்ட வெளியூரில் இருந்து வரும் பேருந்துகள் அங்கு தான் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குகின்றன. அதேபோல் நகரிலிருந்தும் வெளியூர் செல்லும் பயணிகளும் அந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஏறி செல்கின்றனர். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பேருந்து நிறுத்தத்தில் இருபுறமும் பயணிகள் நிழற்குடை இல்லாததால் கொளுத்தும் வெயிலில் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். அருகில் உள்ள கடைகளில் ஒதுங்கி நின்று கிடக்கும் அவலம் உள்ளது.

இந்நிலையில் சாலை விரிவாக்கத்தால் அகற்றப்பட்ட பகுதிகளில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து நகராட்சிக்கும், நெடுஞ்சாலைத்துறைக்கும் கோரிக்கை விடுத்து வருவதுடன், இதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி நகரமன்ற உறுப்பினர் ராதிகா செந்தில் நகராட்சி ஆணையருக்கு அளித்த மனுவில், விழுப்புரம் நகரின் நுழைவுவாயிலான மேல்தெரு பேருந்து நிறுத்தம் முக்கிய பகுதியாக உள்ளது.

மின்உயர்கோபுர மின்விளக்கு இல்லாததால் இருளில் மூழ்கி இருக்கின்றன. உயர்மின் கோபுரம் அமைக்க கோரி பலமுறை வலியுறுத்தப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் பேருந்து நிழற்குடை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை வெயில் காலத்தில் பயணிகள் நலன் கருதி தற்காலிகமாக பயணிகள் நிழற்குடை அமைக்கவும் நகராட்சி சார்பில் குடிநீர் வசதி ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

The post சாலை விரிவாக்கத்தால் அகற்றம் பேருந்து நிறுத்தங்களில் கொளுத்தும் வெயிலில் காத்திருக்கும் பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Villupuram Villupuram ,Villupuram ,Dinakaran ,
× RELATED விழுப்புரம் விற்பனைக்குழு –...