டெல்லி: பெண் எஸ்.பி. பாலியல் தொல்லை வழக்கில் ஜாமீன் கோரி ராஜேஷ்தாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். 3 ஆண்டு சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைக்க மறுத்த நிலையில் மேல்முறையீடு செய்தார். பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ராஜேஷ்தாஸுக்கு விழுப்புரம் கோர்ட் 3 ஆண்டு தண்டனை விதித்தது. காவல்துறையில் முன்னாள் சிறப்பு டிஜிபியாக இருந்தவர் ராஜேஷ் தாஸ். கடந்த 2021ஆம் ஆண்டு பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், 3 ஆண்டுகள் சிறை தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது. விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றமும் கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி இந்த தண்டனையை உறுதி செய்தது. இதையடுத்து ராஜேஷ் தாசுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதியானது. இந்நிலையில் பல ஆண்டுகளாக காவல் துறைக்கு தலைமை வகித்த நிலையில், சிறைக்கு சென்றால் அது தனக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும் எனவும் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு மேல் முறையீட்டில் ஒரு வேளை தான் விடுதலை செய்யப்பட்டால் என்ன ஆகும்? எனவும் வாதிடப்பட்டது. எனவே தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரி ராஜேஷ் தாஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதி தண்டபானி முன்பு விசாரணை நடைபெற்று வந்தது.
விசாரணையின் முடிவில் தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து ஆணையிட்டது. மேலும் பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் இரு நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்ட நபருக்கு எப்படி சலுகை காட்ட முடியும்? என நீதிபதி கேள்வி எழுப்பி இருந்த நிலையில் ராஜேஷ் தாசின் மனு அண்மையில் தள்ளுபடி செய்யப்பட்டது. நிலைமை இப்படி இருக்கையில் தனக்கு ஜாமின் வழங்கக் கோரி ராஜேஷ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். அவருக்கு ஜாமின் கிடைக்குமா இல்லை நிராகரிக்கப்படுமா என்பதை காத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
The post பெண் எஸ்.பி. பாலியல் தொல்லை வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு appeared first on Dinakaran.