×

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடர்ந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரானார் நிர்மலா தேவி

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நிர்மலா தேவி ஆஜரானார். கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடர்ந்த வழக்கில் நிர்மலா தேவி ஆஜர் செய்யப்பட்டார். கருப்பசாமி, முருகன் உள்ளிட்டோரும் ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகினர்.

முன்னாள் பேராசிரியர் நிர்மலா தேவி தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. கல்லூரி மாணவிகளை தவறாக பயன்படுத்தியதாக முன்னாள் பேராசிரியர் நிர்மலா தேவி உள்ளிட்ட 3 பேர் கைதாகினர். பேராசிரியர் நிர்மலா தேவி, உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைதாகினர். நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமியை குற்றவாளிகள் என சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும், உயர் கல்வித்துறையிலும் இருந்து வந்துள்ளார். நிர்மலா தேவி, கல்லூரியில் சில மாணவிகளுக்கு ஆசைவார்த்தைகளைக் கூறி உயர் கல்வித்துறையில் உள்ள முக்கிய நபர்களுக்கு பாலியல் ரீதியாக மாணவிகளைப் பயன்படுத்த முயன்றிருக்கிறார் என சில மாணவிகள், நிர்மலா தேவி பேசியதை ரெகார்ட் செய்து பெற்றோர் மூலம், கல்லூரி நிர்வாகத்தில் புகார் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கல்லூரி நிர்வாகம் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மாணவிகளிடம் பேசிய ஆடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்த பின், போலீஸ் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதற்கிடையே, ஆளுநர் மாளிகையும் இந்த வழக்கில் இணைத்துப் பேசப்பட்டதால், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் தனியாக ஒரு விசாரணைக் குழுவை அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்தார்.

பின்னர், 2018 ஏப்ரலில் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். இவருடன் சேர்ந்து இந்தக் குற்றத்தில் ஈடுபட்டதாக மதுரை காமராசர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அதன்பின், இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், நீதிபதி பகவதி அம்மாள் முன்பு, மூவர் மீதும் 1,360 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டன. 100க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது. மேலும், இருதரப்பு வாதங்கள் மற்றும் விசாரணைகளும் நிறைவு பெற்றன.

இந்த வழக்கில் பலர் மீது குற்றச்சாட்டுகளும், பல்வேறு சந்தேகங்களும் எழுந்த நிலையில், கடைசியில் நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் மட்டும் தான் குற்றவாளிகள் என இறுதி செய்து, குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி தரப்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த குற்றப்பத்திரிகையில் 3 பேருக்கும் எதிராக, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், விபச்சார தடுப்புச் சட்டம், தொழில் நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்திய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதன்பின், கரோனா ஊரடங்கால் வழக்கு தொடர்பான விசாரணை தாமதமானது.

மேலும், இந்த வழக்கில் முந்தைய விசாரணையில் அனைத்து சாட்சிகளும் விசாரிக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 26ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள் தீர்ப்பளிக்க இருந்த நிலையில், பேராசிரியை நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. முருகன் மற்றும் கருப்பசாமி மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், 29ஆம் தேதி நிர்மலா தேவி உட்பட 3 பேரும் கட்டாயம் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார். இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 29) இந்த வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள் இன்று தீர்ப்பு வழங்க உள்ளார்.

 

The post கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடர்ந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரானார் நிர்மலா தேவி appeared first on Dinakaran.

Tags : Nirmala Devi ,Virudhunagar ,Srivilliputhur ,Women's Fast Track Court ,Karuppasamy ,Murugan ,Srivilliputhur Women's Court ,Nirmala… ,
× RELATED வாத்து மேய்ப்பதில் வாய் தகராறு: ஒருவர் அடித்துக் கொலை