×
Saravana Stores

களக்காடு புலிகள் காப்பகத்தில் வரையாடுகள் கணக்கெடுப்பு பணிகள்

*இன்று தொடக்கம்

களக்காடு : களக்காடு புலிகள் காப்பக வனப்பகுதிகளில் தமிழ்நாடு மாநில விலங்கான வரையாடுகள் கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
நெல்லை மாவட்டம், களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் 400 சதுர கி.மீ.பரப்பளவில் களக்காடு புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு சிறுத்தை, புலி, யானை, கரடி, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வகை விலங்கினங்கள் உள்ளன.

ஆண்டு தோறும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்படும். களக்காடு புலிகள் காப்பகத்தில் வாழும் வரையாடுகள் அரியவகை விலங்கு ஆகும். தமிழ்நாடு மாநில விலங்காக அறிவிக்கப்பட்டுள்ள வரையாடுகள் உயர்ந்த மலை சிகரங்களின் மட்டுமே வசிக்கும். புலி உள்ளிட்ட விலங்குகளிடமிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளவே வரையாடுகள் மிக உயரமான பாறைகளை இருப்பிடமாக கொண்டுள்ளதாக வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த 2015ம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பின்படி தமிழ்நாடு, கேரளாவில் 3,122 வரையாடுகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் அழிந்து வரும் விலங்குகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள வரையாடுகளை பாதுகாக்க முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி வரையாடுகள் குறித்து கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதனைதொடர்ந்து களக்காடு புலிகள் காப்பகத்தில் வாழும் வரையாடுகள் குறித்தான கணக்கெடுப்பு பணிகள் இன்று (29ம் தேதி) தொடங்குகிறது. வரும் மே 1ம்தேதி வரை 3 நாட்கள் கணக்கெடுப்பு நடக்கிறது. இதேபோல் கேரளாவிலும் 3 நாட்கள் கணக்கெடுப்பு நடக்கிறது. இதையொட்டி கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் வனத்துறை ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. களக்காடு புலிகள் காப்பகத்தில் களக்காடு, திருக்குறுங்குடி, கோதையாறு வனப்பகுதிகளில் திருவண்ணாமலை மொட்டை, பஞ்சம் தாங்கி மொட்டை, நஞ்சுயூத்து, முத்துக்குழிவயல், விஞ்ச் ஸ்டேசன், விஞ்ச் ஸ்டேசன் மேல்பகுதி, வரையாடு மொட்டை, பந்தடி களம் உள்ளிட்ட பகுதிகளில் நீலகிரி வரையாடுகள் வசித்து வருகின்றன.

இப்பகுதிகளில் களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் தலைமையில் இன்று கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியது. 9 குழுக்கள் தங்கியிருந்து, தினசரி நடந்து சென்று வரையாடுகளை பைனாகுலர் உதவியுடன் நேரில் காண்பது, போட்டோக்கள் எடுப்பது உள்ளிட்ட முறைகளில் கணக்கெடுப்பு பணிகளை நடத்தி வருகின்றனர். கணக்கெடுப்பில் சேகரிக்கப்படும் புள்ளி விபரங்கள் கோவையில் உள்ள நீலகிரி வரையாடுகள் திட்ட அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

* தமிழ்நாடு மாநில விலங்காக அறிவிக்கப்பட்டுள்ள வரையாடுகள் உயர்ந்த மலை சிகரங்களின் மட்டுமே வசிக்கும்.

* கடந்த 2015ம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பின்படி தமிழ்நாடு, கேரளாவில் 3,122 வரையாடுகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

* தமிழ்நாட்டில் அழிந்து வரும் விலங்குகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள வரையாடுகளை பாதுகாக்க முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

The post களக்காடு புலிகள் காப்பகத்தில் வரையாடுகள் கணக்கெடுப்பு பணிகள் appeared first on Dinakaran.

Tags : Kalakadu Tiger Reserve ,Kalakadu ,Kalakadu Tiger Reserve Forests ,Kalakadu Western Ghats, Nellai district ,Kalakadu tiger ,Dinakaran ,
× RELATED களக்காடு அருகே விளைநிலங்களுக்குள்...