×
Saravana Stores

கோடை விடுமுறையை கொண்டாட கொளுத்தும் வெயிலிலும் குவிந்த பக்தர்கள்

*திருச்செந்தூர் கடலில் நீராடி தரிசனம்

திருச்செந்தூர் : கோடை விடுமுறையை கொண்டாட திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நேற்று அதிகாலை முதல் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இவர்களில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை ஏராளமானோர் கொளுத்தும் வெயிலின் தாக்கத்தையும் பொருட்படுத்தாமல் கடலில் உற்சாகமாக நீராடினர்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திகழும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தினமும் பக்தர்கள் வருகை மிகுந்து காணப்படும். விடுமுறை மற்றும் திருவிழாக் காலங்களில் இங்கு லட்சக்கணக்கானோர் வந்து வழிபட்டுச் செல்வதை பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி நடந்து முடிந்தது. அதேபோல் பெரும்பாலான பள்ளிகளில் பொதுத் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக கோடை விடுமுறையை கொண்டாடவும், சுவாமி தரிசனத்திற்காகவும் திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இதற்காக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமாகி தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது. பக்தர்கள் அதிகாலை முதலே கடலிலும், நாழிக்கிணறிலும் நீண்ட வரிசையிலும் நின்று புனித நீராடினர். அதன் பிறகு இலவச பொது தரிசனம், ரூ. 100 சிறப்பு கட்டண தரிசனம் மற்றும் மூத்த குடிமக்கள் வழி என அனைத்திலும் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

இதனால் கோயில் வளாகமே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. மேலும் கடந்த முகூர்த்த தினங்களில் திருமணம் நடைபெற்ற ஜோடிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தாரும் அதிகளவில் வந்திருந்தனர். பக்தர்களின் கூட்டத்தால் திருச்செந்தூரில் உள்ள விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. கோயிலுக்கு வருகைதந்த பக்தர்களின் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்கில் அதிகரித்த நிலையில் இவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன், இணை ஆணையாளர் கார்த்திக், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில்முருகன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

ஆபத்தை உணராமல் ஆழத்திற்கு சென்ற இளைஞர்கள்

குரு ஸ்தலமாக திகழும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் புண்ணிய தீர்த்தமான கடல் மற்றும் நாழிக்கிணறில் புனித நீராடி அல்லது கால்களை நனைத்த பிறகு சுவாமி தரிசனம் செய்வது வழக்கமாகும். இந்நிலையில் கோடை விடுமுறைக்கு குடும்பம் குடும்பமாக வந்த பக்தர்கள் அதிகாலை முதலிலே கடலில் குளிக்க தொடங்கினர்.

பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து போதும் குறிப்பாக கொளுத்தும் வெயிலிலும் குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை உற்சாகமாக கடலில் நீராடியும், கடற்கரை மணலில் ஓடியாடி விளையாடியும் விடுமுறையை கழித்தனர். ஒரு சில இளைஞர்கள் கடற்கரையில் ஆழத்தை குறிக்கும் எல்லைக் கயிறையும் தாண்டி தூரத்தில் கூட்டமாக பாறைகளின் மேல் நின்று ஆபத்தை உணராமல் விளையாடிக் கொண்டிருந்தனர்.

கடற்கரையில் ஆழப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும், பக்தர்கள் தங்கள் குழந்தைகள், உடன் வந்தவர்கள் மற்றும் உடைமைகளை பாதுகாத்து கொள்ளுமாறு புறக்காவல் நிலையத்திலிருந்து காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தும் அதையும் மீறி பக்தர்கள் ஆழத்திற்கு சென்றனர்.

The post கோடை விடுமுறையை கொண்டாட கொளுத்தும் வெயிலிலும் குவிந்த பக்தர்கள் appeared first on Dinakaran.

Tags : Tiruchendur ,Tiruchendur Subramania Swamy Temple ,Swami ,
× RELATED திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி...