×
Saravana Stores

கோடை கொண்டாட்டத்துக்கு பிரையண்ட் பூங்கா தயார் ஒரு கோடி பூக்கள் ஒரு வாரத்தில் பூக்கும்

கொடைக்கானல் : ‘மலைகளின் இளவரசி’ கொடைக்கானலில் கோடை சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது. தற்போது கோடை விடுமுறை தொடங்கியதில் இருந்து சுற்றுலாப் பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. நேற்று வார விடுமுறையும் சேர்ந்து வந்ததால் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது.
கொடைக்கானலில் தற்போது இதமான குளுகுளு சூழல் நிலவி வருகிறது.

இதனால் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் உற்சாகமாக கிளம்பி வந்து பல்வேறு இடங்களையும் சுற்றிப்பார்த்து ரசிக்கின்றனர். பிரையண்ட் பூங்கா, மோயர் பாய்ண்ட், தூண் பாறை, குணா குகை உள்ளிட்ட பகுதிகளில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில், கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் ஹவுஸ் ஃபுல் ஆகி உள்ளன. கூடுதலான சுற்றுலா பயணிகளின் வருகை காரணமாக அங்கீகாரம் இல்லாத தங்கும் விடுதிகளில் கட்டண கொள்ளை அரங்கேறி வருகிறது.

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் இந்த ஆண்டு 20,000 தொட்டிகளில் மலர் நாற்றுக்கள் நடப்பட்டு, தற்போது பூக்கள் பூக்க தொடங்கியுள்ளன. பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இங்கே பூக்கும் பூக்களை ரசித்துச் செல்கின்றனர். பாப்பி, கேலண்டலா, ஜினியா, சால்வியா, ஸ்டார் ப்ளக்ஸ், ஆன்டிரைனம் உள்ளிட்ட மலர்கள் பூக்கத் தொடங்கி உள்ளன. இன்னும் ஒரு வாரத்தில் ஒரு கோடி மலர்கள் பூத்துக் குலுங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 61வது மலர் கண்காட்சி வரும் மே மாதம் நடைபெற உள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பூங்காவில் நுழைவு கட்டணமாக ரூ.7.25 லட்சம் வசூலிக்கப்பட்டது. இந்த ஆண்டு சுமார் ரூ.10 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ.13.50 லட்சம் வசூல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு தற்போது வரை ரூ.14.5 லட்சம் வசூலாகி உள்ளது. கடந்த ஆண்டு கோடை சீசனில் சுமார் 7 லட்சம் பயணிகள் பூங்காவை பார்வையிட்டனர். இந்த ஆண்டு பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post கோடை கொண்டாட்டத்துக்கு பிரையண்ட் பூங்கா தயார் ஒரு கோடி பூக்கள் ஒரு வாரத்தில் பூக்கும் appeared first on Dinakaran.

Tags : Bryant Park ,Kodaikanal ,Princess of the Hills' ,
× RELATED ‘மலைகளின் இளவரசி’க்கு புது ரூட்:...