* பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை
நாகர்கோவில் : கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் சரிவர சமைக்கப்படாத முட்டை, இறைச்சி வகைகளை உண்பதை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.பறவை காய்ச்சல் என்பது பறவைகளுக்கு இடையே பரவும் ஒரு வைரஸ் நோய் ஆகும். இந்த நோயானது அரிதாக மனிதர்களுக்கும் பரவும் வாய்ப்பு உள்ளது. காய்ச்சல், இருமல், தொண்டைவலி, உடல் வலி போன்றவை இந்த நோயின் சில அறிகுறிகள் ஆகும். இந்த நோயானது பறவைகளிடம் இருந்து மனிதர்களுக்கு நேரிடையாகவும் தூய்மைக்கேடு உள்ள சூழ்நிலையிலும் பரவ வாய்ப்பு உள்ளது.
கேரளா மாநிலத்தில் ஆலப்புழா மாவட்டத்தில் வாத்துகளிடையே இந்த நோய் ஏற்பட்டது. எனவே அம்மாநிலத்தில் இருந்து வரும் வாத்துகள், கோழிகள் மற்றும் விலங்குகள் கால்நடை பராமரிப்பு துறை மூலம் கண்காணிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக குமரி மாவட்டத்தில் களியக்காவிளை அருகே படந்தாலுமூடு பகுதியில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் குமரி மாவட்டம் முழுவதும் உள்ள கறிக்கோழி பண்ணைகள் கால்நடை துறை அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மூன்று மாதங்களுக்கு இந்த சோதனைகளை தொடர்ந்து மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக பொதுமக்களுக்கு சுகாதாரத்துறையால் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:
* ப்ளூ போன்ற அறிகுறிகள், இருமல், சளி, காய்ச்சல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் உள்ளவர்கள் உடனே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
* பறவைகளை கையாளுபவர்கள் குறிப்பாக உடல் நலம் குன்றிய பறவைகளை கையாளுபவர்கள் , இறந்த பறவைகளை கையாளுபவர்கள் மற்றும் இறைச்சி கூடத்தில் பணிபுரிபவர்கள் கவனத்துடன் பணிபுரிய வேண்டும். ஏதேனும் ப்ளூ காய்ச்சல் அறிகுறிகள் இருப்பின் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை, மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
* அசாதாரண பறவை இழப்புகள் இருப்பின் உடனே கால்நடை மருத்துவ துறைக்கு தெரிவிக்க வேண்டும். கை கழுவுதல் உட்பட தன் சுத்தம் மற்றும் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
* முற்றிலும் சமைக்கப்படாத மற்றும் சரிவர சமைக்கப்படாத முட்டை மற்றும் இறைச்சி வகைகளை உண்பதை தவிர்க்க வேண்டும். பறவைகாய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். இந்த நோய் சம்பந்தமான வதந்திகளை நம்ப வேண்டாம்.
* கூடுதல் தகவல்களுக்கு தொலைபேச எண் 104ஐ தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கேரளாவில் பறவை காய்ச்சல் பரவல் எதிரொலி சரிவர சமைக்கப்படாத முட்டை, இறைச்சி வகைகளை தவிர்க்க வேண்டும் appeared first on Dinakaran.