அருமனை, ஏப்.29 : அருமனை அண்டுகோடு பகுதியில் தினமும் அதிகளவில் மக்கள் நடமாட்டம் இருப்பதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும். குழித்துறை பகுதியில் இருந்து ஆலஞ்சோலை செல்லும் பிரதான சாலையின் மையமாக அண்டுகோடு வளைவு பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள மின்கம்பத்தில் சுமார் ஒரு மாதத்துக்கு முன்பு திடீரென விபத்து ஏற்பட்டது.
இதனால் இந்த மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. தற்போது மின்கம்பம் உள்ள பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் சாலையில் சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையோரம் செல்லும் மக்கள் மிகுந்த அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இப்பகுதி வழியாகத்தான் விடியற்காலையில் ரப்பர் பால் வடிக்கும் தொழிலாளர்கள் பலர் செல்கின்றனர். இந்த மின்கம்பம் கம்பிகளின் உதவியுடன் அந்தரத்தில் தொங்கிய நிலையிலேயே நின்று கொண்டிருக்கிறது. எனவே அதிகாரிகள் உடனடியாக இந்த மின்கம்பத்தை அப்புறப்படுத்த வேண்டுமென அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post அருமனை அருகே பழுதான மின்கம்பத்தால் பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.