அருமனை, ஏப்.29 : கேரளாவில் இருந்து வாகனங்கள் மூலம் கழிவுகளை ஏற்றி வந்து குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ரகசியமாக கொட்டப்படும் சம்பவம் நடந்து வருகிறது. அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என்பதால் பொதுமக்கள் தாங்களே காத்திருந்து அந்த வாகனங்களை சிறை பிடிக்கின்றனர்.
அந்த வகையில் கேரளாவில் இருந்து விமான நிலைய கழிவுகள், நட்சத்திர மற்றும் உணவு விடுதிகளின் கழிவுகளை ஏற்றிக்கொண்டு கூண்டு லாரி ஒன்று நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் அருமனை மஞ்சாலுமூடு சென்றிபொற்றை அருகே வந்தது. இது குறித்து ஏற்கனவே தகவல் கிடைத்த நிலையில் அப்பகுதி மக்கள் தயாராக காத்திருந்து அந்த லாரியை சிறைபிடித்தனர்.
தகவல் கிடைத்ததும் அருமனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கங்கை நாதபாண்டியன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். உள்ளிருந்த உணவு கழிவுகள் அதிக துர்நாற்றத்துடன் காணப்பட்டதால் அப்பகுதி பஞ்சாயத்து தலைவரை வரவழைத்து கழிவு ஏற்றிவந்த லாரிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் அந்த லாரி கழிவுகளுடன் மீண்டும் கேரளாவுக்கு திருப்பி அனுப்பப் பட்டது.
The post அருமனை அருகே கேரளாவில் இருந்து கழிவுகள் ஏற்றி வந்த லாரி சிறைபிடிப்பு appeared first on Dinakaran.