வேலூர், ஏப்.29: காட்பாடி அருகே விஜிலென்ஸ் போலீசார் ரெய்டு நடத்திய சம்பவத்தில், ஊராட்சி செயலாளர் மற்றும் அவரது மனைவி மீது ரூ.20.43 லட்சம் சொத்து குவித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா திருவலம் பேரூராட்சிக்குப்பட்ட மேட்டுப்பாளையம் பழைய காலனி குடியிருப்பில் வசித்து வருபவர் பிரபு(49). இவர் பொன்னை அடுத்த பாலகுப்பம் கிராம ஊராட்சி செயலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஊராட்சி செயலர் பிரபு காட்பாடி ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் ஊராட்சி செயலாளராக பணியாற்றியபோது கடந்த 2011-17ம் ஆண்டில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு, சொத்துக்களை வாங்கியுள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது.
அந்த குற்றச்சாட்டுகளின் பேரில் வேலூர் லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறையினர் கடந்த 25ம் தேதி பிரபு வீட்டில் திடீர் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைபற்றினர். இதைதொடர்ந்து ஆவணங்களை ஆய்வு செய்ததில் ஊராட்சி செயலாளர் மற்றும் அவரது மனைவி பெயரில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.20 லட்சத்து 43 ஆயிரம் சொத்து குவித்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் கிராம ஊராட்சி செயலாளர் பிரபு, அவரது மனைவி கலையரசி ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு இதுகுறித்து அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் ஊராட்சி செயலாளர் பிரபு மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.
The post ஊராட்சி செயலாளர், மனைவி மீது ரூ.20.43 லட்சம் சொத்து குவிப்பு வழக்கு appeared first on Dinakaran.