ஊட்டி: கோடை சீசனின்போது வரக்கூடிய சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 126வது மலர் கண்காட்சி மே 10ம் தேதி துவங்கி 20ம் தேதி வரை நடக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்கள் கோடை சீசன் காலமாகும். இந்த சமயத்தில் கோடை விடுமுறையை கொண்டாடவும், சமவெளி பகுதிகளில் நிலவும் வெயிலில் இருந்து தப்பித்து கொள்ளவும் குளு குளு காலநிலை நிலவும் ஊட்டியை நோக்கி சுற்றுலா பயணிகள் படையெடுப்பார்கள். அவர்களை மகிழ்விக்கும் நோக்கில் மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலைத்துறை மற்றும் சுற்றுலாத்துறை மூலம் மே மாதம் முழுவதும் கோடை விழா நடத்தப்படுகிறது.
மே மாதத்தில் ஒவ்வொரு வார இறுதி நாட்களில் ரோஜா காட்சி, காய்கறி கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, மலர் கணகாட்சி மற்றும் பழக்காட்சி ஆகியவை நடத்தப்படும். இதுதவிர படகு ேபாட்டிகள், புகைப்பட கண்காட்சி போன்றவைகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்படும். இவற்றை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்வார்கள். இதனிடைேய கடந்த மார்ச் மாதம் கோடை விழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.
இம்முறை நாடாளுமன்ற தேர்தல் காரணமாக முதற்கட்டமாக மே மாதம் 17ம் தேதி துவங்கி 22ம் தேதி வரை 5 நாட்கள் 126வது மலர் கண்காட்சியும், மே 24, 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 64வது பழக்காட்சியும் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. ரோஜா கண்காட்சி உள்ளிட்ட பிற நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் வாக்குபதிவு முடிவடைந்த நிலையில் ஊட்டியில் அனைத்து கோடை விழாக்களும் நடத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்ந்து அமலில் உள்ளதால் இம்முறை காய்கறி கண்காட்சி, ரோஜா கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி ஆகியவை நடத்தப்பட வாய்ப்பு இல்லை.
இருந்தபோதும், கோடை சீசனின்போது வரக்கூடிய சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடையாமல் இருக்க மே 17ம் தேதி துவங்க உள்ள மலர் கண்காட்சியை முன்கூட்டியே துவக்குவது எனவும், கூடுதலாக சில நாட்கள் நடத்துவது என தோட்டக்கலைத்துறை முடிவு செய்தது. தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மூலம் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதனிடையே மலர் கண்காட்சியை முன்கூட்டியே துவக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக தெரிகிறது. இதனால் மே 17ம் தேதி துவங்குவதாக இருந்த மலர் கண்காட்சி முன்கூட்டியே 10ம் தேதியே துவங்கி 20ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தோட்டக்கலைத்துறை துவக்கி உள்ளது.
The post களைகட்ட போகும் கோடை சீசன் ஊட்டியில் மலர் கண்காட்சி மே 10ம் தேதி தொடக்கம் appeared first on Dinakaran.