×
Saravana Stores

போராட்டங்கள் நடத்தியபோதும் தடையை அமல்படுத்தி விட்டு தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதிப்பதா?

மும்பை: உள்நாட்டில் வெங்காய விலையை கட்டுப்படுத்தும் விதமாக கடந்தாண்டு டிசம்பர் மாதம், ஒன்றிய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்தது. இந்தாண்டு மார்ச் 22ம் தேதி தடை நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், அன்றைய தினம் வெங்காய ஏற்றுமதிக்கான தடையை காலவரையற்று நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டது. பாதிக்கப்பட்ட வெங்காய விவசாயிகள் தடையை நீக்கக்கோரி போராட்டம் நடத்தினர். எனினும் ஒன்றிய அரசு தடையை நீக்கவில்லை.

இந்நிலையில் 2 தினங்களுக்கு முன் வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு 99,150 மெட்ரிக் டன் வெங்காய ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியது. மத்திய கிழக்கு மற்றும் சில ஐரோப்பிய நாடுகளுக்கு 2,000 டன் வெள்ளை வெங்காயம் ஏற்றுமதி செய்யவும் அனுமதித்தது. மகாராஷ்டிராவில் நாசிக், திண்டோரி, ஷிரூர், ஷீரடி, அகமதுநகர், சோலாப்பூர் மற்றும் மாதா ஆகிய பகுதிகளில் வெங்காய விவசாயிகள் பெரும்பங்கு வகிக்கின்றனர். இந்த பகுதிகளில் மக்களவை தேர்தல் நடக்க உள்ளதை முன்னிட்டு ஒன்றிய அரசு இந்த அனுமதியை வழங்கியதாக தெரிகிறது. இதற்கு விவசாயிகள் எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிரா வெங்காய உற்பத்தியாளர் விவசாயிகள் சங்கத் தலைவர் பாரத் டிகோல் கூறுகையில், ‘‘ஒன்றிய அரசு வெங்காய ஏற்றுமதிக்கான தடையை முழுமையாக நீக்கவில்லை. தேர்தலை ஒட்டி விவசாயிகளை சமாதானப்படுத்துவதற்காக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ஏற்றுமதி தடையால் லாசல்கான் சந்தையில் வெங்காய விலை வீழ்ச்சி அடைந்தது. ஒவ்வொரு விவசாயிக்கும் ஏக்கருக்கு ரூ.1.5 லட்சம் இழப்பு ஏற்பட்டது. இதை மனதில் வைத்துதான் விவசாயிகள் தேர்தலில் வாக்களிப்பார்கள்’’ என்றார். ஒன்றிய அரசின் முடிவால் உள்நாட்டுச் சந்தையில் வரத்து குறைந்து வெங்காயம் விலை உயரும் அபாயம் உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

The post போராட்டங்கள் நடத்தியபோதும் தடையை அமல்படுத்தி விட்டு தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதிப்பதா? appeared first on Dinakaran.

Tags : Mumbai ,EU government ,Dinakaran ,
× RELATED பூதாகரமாகும் மியூல் வங்கிக் கணக்கு...