×
Saravana Stores

ஒன்றியத்தில் பலவீனமான அரசை விரும்புகிறார் மம்தா: நட்டா குற்றச்சாட்டு

பஹரம்பூர்: ‘தீவிரவாதத்தை மென்மையாக கையாளும் பலவீனமான அரசு ஒன்றியத்தில் அமைய வேண்டுமென மம்தா பானர்ஜி விரும்புகிறார்’ என பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறி உள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியதாவது: நாங்கள் வலிமையான அரசாங்கத்தை பற்றி பேசுகிறோம்.

ஆனால் மம்தா பானர்ஜி பலவீனமான அரசை எதிர்பார்க்கிறார். சமாதானப்படுத்துகின்ற, ஊழல் மற்றும் பாகுபாடுகளில் நம்பிக்கை கொண்ட மற்றும் தீவிரவாதிகளை மென்மையாக கையாளும் அரசு ஒன்றியத்தில் அமைய வேண்டுமென விரும்புகிறார். ஊடுருவுபவர்களுக்கு ஆதரவளிக்கும், குடியுரிமை சட்டத்தை எதிர்க்கும் மம்தாவின் சமாதான அரசியலை நாங்கள் எதிர்க்கிறோம்.

அவரது அரசு தீவிரவாதிகள் மீது அனுதாபம் கொண்டுள்ளது. மேற்கு வங்கத்தில் மம்தா அரசு, கணக்கிட முடியாத ஊழலைத் தவிர வேறெதுவும் செய்யவில்லை. சமீபத்தில், ஆசிரியர் நியமன முறைகேடு மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தையும் வாய்ப்புகளையும் இழந்துள்ளனர். இது மேற்கு வங்கத்தில் ஊழலும் கொள்ளையும் அன்றாட வாடிக்கை என்பதை நிரூபிக்கிறது.

மம்தா ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. சந்தேஷ்காலியில் பெண்களின் மானத்துடனும் கண்ணியத்துடனும் விளையாடிய ஷாஜஹான் ஷேக்கை பாதுகாக்க மம்தா முயன்ற விதம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. பெண் ஆளும் மாநிலத்தில் பெண்கள் துன்புறுத்தப்படுவதை விட வெட்கக்கேடானது வேறென்ன இருக்க முடியும்? இவ்வாறு கூறினார்.

 

The post ஒன்றியத்தில் பலவீனமான அரசை விரும்புகிறார் மம்தா: நட்டா குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Mamata ,Natta ,Baharampur ,Mamata Banerjee ,Union ,BJP ,National President ,JP Natta ,West Bengal ,Murshidabad ,Dinakaran ,
× RELATED தொடர் உண்ணாவிரதம் கொல்கத்தா மருத்துவர்களிடம் முதல்வர் மம்தா பேச்சு