×
Saravana Stores

தீப்பெட்டியை எரிக்கும் சீன லைட்டர்கள்

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், திருவேங்கடம், விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி, வெம்பக்கோட்டை, வேலூர் மாவட்டம் குடியாத்தம், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஆகிய பகுதிகளில் தீப்பெட்டி உற்பத்தி நடந்து வருகிறது. இதில், 80 சதவீதம் தீப்பெட்டிகள், கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

தமிழகம் முழுவதும் 50 முழு இயந்திரத் தீப்பெட்டி ஆலைகளும், 320 பகுதி இயந்திரத் தீப்பெட்டி ஆலைகளும், 2,000க்கும் மேற்பட்ட தீப்பெட்டி பேக்கிங் சார்பு ஆலைகளும் இயங்கி வருகின்றன. நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில், 90 சதவீதம் பேர் பெண்களே பணியாற்றுகின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டிகள், இந்தியாவின் பல மாநிலங்களுக்கு மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கனவே மூலப்பொருட்களின் விலை உயர்வால் தீப்பெட்டி தொழில் பாதிக்கப்பட்ட நிலையில், கள்ளச்சந்தையில் சீன லைட்டர்கள் விற்பனை, 12 சதவீதம் ஜிஎஸ்டி என பல நெருக்கடிகளை சந்திப்பதால் தீப்பெட்டி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படுவதாக, தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

ஆயிரம் எண்ணிக்கை கொண்ட சீன லைட்டர்கள் கள்ளச்சந்தையில் ரூ.4750க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. அதன்பிறகு கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்டு ஒரு லைட்டர் ரூ.10க்கு விற்கப்படுகிறது. அதாவது ரூ.4.75க்கு கொள்முதல் செய்யப்படும் ஒரு சீன லைட்டர், கடைகளில் ரூ.10க்கு விற்கப்படுகிறது. மேலும் ஒரு லைட்டர் 20 தீப்பெட்டிகளுக்கு சமம் என்று கூறப்படுகிறது. 20 தீப்பெட்டிகள் வாங்குவதற்கு நுகர்வோருக்கு ரூ.20 செலவாகிறது. அதேநேரத்தில் சீன லைட்டர் ரூ.10க்கு விற்கப்படுவதால் தீப்பெட்டியை ஒப்பிடும் போது ரூ.10 மிச்சமாகிறது. கைக்கும் அடக்கமாக இருப்பதால் பெரும்பாலானோர் சீன லைட்டர்களை வாங்கிச் செல்கின்றனர்.

இதனால் தீப்பெட்டி விற்பனை மந்தமாகி உற்பத்தி குறைவதாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் சேதுரத்தினம் கூறியதாவது: கடந்த 5 ஆண்டுகளாக தீப்பெட்டி தொழில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. 5 ஆண்டுகளுக்கு முன்பு 18 சதவீதமாக இருந்த ஜிஎஸ்டி வரியை கனிமொழி எம்பி, கடம்பூர் ராஜூ எம்எல்ஏ ஆகியோர் மூலம் ஒன்றிய நிதியமைச்சரிடம் நேரில் சென்று கோரிக்கை வைத்ததால் 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக சீன லைட்டர்களின் வரவு அதிகளவில் இருந்த காரணத்தால் தீப்பெட்டி விற்பனை அடியோடு பாதித்தது. இதை நாங்கள் மாநில அரசின் மூலமாக ஒன்றிய அரசுக்கு தெளிவுபடுத்த வேண்டியதால், முதல்வர் மு.க.ஸ்டாலின் தென் மாவட்டத்திற்கு வருகை தந்தபோது கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலையை பார்வையிட்டு அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுடைய கோரிக்கைகள் குறைகளை எல்லாம் நேரில் வந்து கேட்டறிந்து ஒன்றிய அரசுக்கு கடிதம் மூலமாக தெரியப்படுத்தினார்.

இதனைத்தொடர்ந்து 20 ரூபாய்க்கு மேற்பட்ட லைட்டர்கள் தான் விற்பனை செய்ய வேண்டும். அதற்கு குறைந்தவற்றை விற்பனை செய்யக்கூடாது என்கிற ஒரு ஆணையைப் தமிழக முதல்வர் பெற்றுத் தந்தார். ஆனால் இப்போது தடையை மீறி நேபாள நாட்டின் வழியாக சீன லைட்டர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவி சிறு கிராமங்களில் கூட விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தீப்பெட்டி விற்பனை மிகப் பெரிய அழிவை சந்தித்து வருகிறது. வாரத்தில் 6 நாட்கள் வேலை நடந்த தொழிற்சாலைகளில் கடந்த 2 வருடங்களாக வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை நடைபெறுகிறது. இதனால் எங்களுக்கு மூலப் பொருட்கள் விற்பனை செய்த வியாபாரிகளுக்கு பணம் பட்டுவாடா செய்ய முடியவில்லை.

தொழிலாளர்களுக்கு நிரந்தரமாக வேலை கொடுக்க முடியவில்லை. வாங்கிய கடனுக்கு வட்டி ஏறுகிறது. மேலும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் கடும் வெப்பத்தின் காரணமாக தீப்பெட்டி தொழிற்சாலைகள் ஆங்காங்கே இப்போது எதிர்பாராத விதமாக தீ விபத்துகளை சந்திக்கின்ற ஒரு சூழ்நிலையில் எங்களிடம் அளவுக்கு அதிகமாக பண்டல்களை இருப்பு வைக்க முடியவில்லை. முன்புபோல் ஆர்டர்களும் இல்லை. எனவே இதுபோன்ற காரணங்களை முன்வைத்து எங்களது தீப்பெட்டி தொழிற்சாலைகள் கடந்த 10 தினங்கள் கதவடைப்பு செய்து உற்பத்தியை நிறுத்தம் செய்தது. தற்போது தீப்பெட்டி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கடந்த 22ம் தேதி முதல் தீப்பெட்டி ஆலைகள் மீண்டும் உற்பத்தியை தொடங்கி உள்ளது. வரும் ஜூன் மாதம் பதவியேற்க உள்ள புதிய ஒன்றிய அரசு தீப்பெட்டி உற்பத்திக்கு விதிக்கப்பட்ட 12 சதவீத ஜிஎஸ்டியை, 5 சதவீதமாக குறைக்க வேண்டும். சீன லைட்டர்களை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

* வேறு தொழிலும் தெரியாதே… பெண் தொழிலாளி கண்ணீர்

பெண் தொழிலாளி மனோன்மணி கூறும்போது, ‘முன்பெல்லாம் வாரத்தில் 6 நாட்கள் வேலை கொடுப்பாங்க. தினமும் 200 முதல் 250 ரூபாய் வரை சம்பளம். வாரந்தோறும் சம்பளம் கொடுத்து விடுவார்கள். இதை வைத்துதான் வீட்டு வாடகை கொடுக்கணும். மற்ற செலவுகளையும் பார்க்க வேண்டும். 6 நாள் வேலை பார்க்கும் போது வாரத்திற்கு ரூ.1500 கிடைக்கும். தற்போது 4 நாள் வேலை மட்டுமே இருப்பதால் வாரத்திற்கு ரூ.1000 மட்டும் தான் கிடைக்கிறது. தீப்பெட்டி தொழிலை விட்டால் வேறு எந்த தொழிலும் தெரியாது என்று கண்ணீர் வடித்தார். பின்னர், ஆலைகளில் தீப்பெட்டி பண்டல்களும் தேங்கி கிடக்கிறது. தற்போது வெயில் சுட்டெரிப்பதால் ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்து விடக்கூடாது என்ற அச்சமும் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே தீப்பெட்டி பண்டல்களை முன்பு போல் விற்பனை செய்ய நடவடிக்கை எடுப்பதோடு, எங்களுக்கு மீண்டும் வாரத்திற்கு 6 நாட்கள் வேலை வழங்க வேண்டும்,’என்று வேதனையுடன் தெரிவித்தார்.

* வாரத்தில் 6 நாள் வேலை வேண்டும்

தனியார் தீப்பெட்டி ஆலை போர்மேன் முத்து கூறுகையில், ‘தீப்பெட்டி ஆலையில் தற்போது வாரத்திற்கு 4 நாள் தான் வேலை நடக்கிறது. இதற்கு காரணம் சீன லைட்டர்களின் விற்பனைதான். லைட்டர்கள் 12 ரூபாய்க்கு விற்பதால் தீப்பெட்டி விற்பனையாகாமல் பண்டல், பண்டல்களாக தேங்கி கிடக்கிறது. வாரத்தில் 4 நாள் வேலை பார்ப்பதால் எங்களுக்கு போதிய வருமானமும் கிடைப்பதில்லை. 4 நாள் சம்பளத்தை வைத்து வீட்டு சாப்பாட்டு செலவு, ஆஸ்பத்திரி செலவு, நல்லது, கெட்டது, கோயில் திருவிழாக்கள், கல்யாண வீடு போன்றவற்றை எப்படி சமாளிக்க முடியும்?. இந்த சம்பளத்தை வைத்து குடும்பம் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்ததும் பள்ளிகள் திறந்து விடும். பீஸ் கட்ட வேண்டும். எனவே தீப்பெட்டி ஆலைகளில் முன்புபோல் வாரத்தில் 6 நாட்கள் வேலை நடைபெற உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’என்றார்.

* ரூ.50 லட்சம் வரை வங்கிக் கடன் கிடைக்குமா?

நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பரமசிவம் கூறுகையில்,‘தற்போது வங்கியில் முத்ரா திட்டம் மூலம் ரூ.5 லட்சம் வரை எந்தவிதமான செக்யூரிட்டியும் இல்லாமல் கடன் கொடுத்து வருகிறார்கள். தீப்பெட்டி தொழிலில் குறைந்தபட்சம் ஒரு கம்பெனியில் 200 தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர். இந்த தீப்பெட்டி தொழிலுக்கு 50 லட்ச ரூபாய் வரை வங்கி கடன் அளித்தால்தான் தொழிலை எங்களால் நிரந்தரமாக செய்ய முடியும். எனவே, சிறு குறு தொழிலை ஊக்கப்படுத்துகின்ற வகையில் ஒன்றிய, மாநில அரசுகள் வங்கி மூலமாக 50 லட்சம் ரூபாய் வரை எங்களுக்கு கடனுதவி அளிக்க வேண்டும். மேலும் கொரோனா காலத்தில் எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க வங்கியில் வாங்கிய கடனுக்கான வட்டியையாவது தள்ளுபடி செய்ய வேண்டும். அசலை தள்ளுபடி செய்ய வேண்டுமென்று நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை. சீன லைட்டர்கள் வரவால் தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த லைட்டர்கள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. எனவே இந்தியாவில் சீன லைட்டர்களுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும்,’ என்றார்.

* மூலப்பொருட்கள் விலை நிலவரம்

தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களான அட்டை, மெழுகு, சிவப்பு பாஸ்பரஸ், பொட்டாசியம் குளோரைடு ஆகியவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவைகளில் குஜராத் மற்றும் மும்பையில் இருந்து அட்டை கிலோ ரூ.45க்கும், சென்னை மற்றும் கொல்கத்தாவில் இருந்து மெழுகு கிலோ ரூ.65க்கும், தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து குச்சி தரத்திற்கு ஏற்றவாறு கிலோ ரூ.45 முதல் ரூ.55 வரையும், தமிழகம், புதுச்சேரியில் இருந்து பொட்டாசியம் குளோரைடு கிலோ ரூ.108க்கும், வெளிநாடுகளில் இருந்து பாஸ்பரஸ் கிலோ ரூ.650 முதல் ரூ.700 வரையும் கொள்முதல் செய்யப்படுகிறது.

* சம்பளம் எவ்வளவு?

தீப்பெட்டி ஆலைகளை பொறுத்தவரை தொழிலாளர்களின் திறனுக்கு ஏற்றவாறு சம்பளம் வழங்கப்படுகிறது. நன்றாக வேலை பார்ப்பவர்கள் நாள் ஒன்றுக்கு ரூ.250ம், சுமாராக வேலை பார்ப்பவர்கள் ரூ.180 முதல் ரூ.200 வரையும் கூலி பெறுகின்றனர். உற்பத்தியில் 25 சதவீதம் கூலியாக சென்று விடுகிறது. அதாவது 600 தீப்பெட்டிகள் கொண்ட பண்டல் ரூ.400க்கு விற்கப்படுகிறது என்றால் இவற்றை உற்பத்தி செய்ய ரூ.100 கூலியாக வழங்கப்படுகிறது. இவை தவிர மூலப்பொருட்கள், கம்பெனி வாடகை, மின் கட்டண செலவு, போக்குவரத்து செலவு ஆகியவை தனி.

* ஒரு தீப்பெட்டி உற்பத்தி செய்ய 60 பைசா செலவு

ஒரு தீப்பெட்டியில் 35 முதல் 40 குச்சிகள் வரை இருக்கும். இவை தரம் மற்றும் பிராண்டுக்கு ஏற்ப 600 தீப்பெட்டிகள் கொண்ட பண்டல் ரூ.320 முதல் ரூ.380 வரை ஜிஎஸ்டியுடன் சேர்த்து விற்பனை செய்யப்படுகிறது. இவை தவிர போக்குவரத்து செலவு, இறக்கு கூலி ஆகியவை சேர்த்து வடமாநிலங்களில் 600 தீப்பெட்டிகள் கொண்ட பண்டல் ரூ.450 வரை ஆகிறது. அவர்கள் அதனை ரூ.500 முதல் ரூ.550 வரை விற்பனை செய்கின்றனர். அதன்பிறகு நுகர்வோருக்கு ஒரு தீப்பெட்டி ரூ.1க்கு விற்கப்படுகிறது. ஒரு தீப்பெட்டி உற்பத்தி செய்ய ஜிஎஸ்டி சேர்த்து 60 பைசா செலவாகிறது. அதன்பிறகு மொத்த வியாபாரம், சில்லறை வியாபாரம் என கைமாறி பொதுமக்களுக்கு ஒரு ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

The post தீப்பெட்டியை எரிக்கும் சீன லைட்டர்கள் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Kovilpatti ,Tuticorin district ,Shankarankovil ,Tenkasi district ,Thiruvenkadam ,Chatur ,Virudhunagar district ,Sivakasi ,Vembakottai ,Kudiatham ,Vellore district ,Kaveripatnam ,Krishnagiri district ,
× RELATED தீபாவளிப் பண்டிகையை ஒட்டி அமோக...