×

ஐதராபாத்துக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி: 3 வது இடத்துக்கு முன்னேற்றம்

சென்னை: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் 78 ரன் வித்தியாசத்தில் வென்று 3 வது இடத்துக்கு முன்னேறியது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். சிஎஸ்கே தொடக்க வீரர்களாக அஜிங்க்யா ரகானே, கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் களமிறங்கினர். ரகானே 9 ரன் எடுத்து புவனேஸ்வர் குமார் வேகத்தில் ஷாபாஸ் அகமது வசம் பிடிபட்டார்.

அடுத்து ருதுராஜ் – டேரில் மிட்செல் இணைந்து பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். ருதுராஜ் 32 பந்திலும், மிட்செல் 29 பந்திலும் அரை சதம் அடித்தனர். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு107 ரன் சேர்த்தது. மிட்செல் 52 ரன் (32 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி உனத்கட் பந்துவீச்சில் நிதிஷ் குமாரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு ருதுராஜ் – ஷிவம் துபே ஜோடி சேர்ந்து அதிரடியைத் தொடர, சூப்பர் கிங்ஸ் ஸ்கோர் ஜெட் வேகத்தில் பறந்தது. சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ருதுராஜ் 98 ரன் (54 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி நடராஜன் பந்துவீச்சில் நிதிஷ் குமார் வசம் பிடிபட்டார். சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 212 ரன் குவித்தது.

ஷிவம் துபே 39 ரன் (20 பந்து, 1 பவுண்டரி, 4 சிக்சர்), எம்.எஸ்.தோனி 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சன்ரைசர்ஸ் பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார், நடராஜன், உனத்கட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 213 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களமிறங்கியது. டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா இணைந்து துரத்தலை தொடங்கினர். தேஷ்பாண்டே வீசிய 2வது ஓவரில் ஹெட் (13 ரன்), அன்மோல்பிரீத் (0) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஐதராபாத் அணி சரிவை சந்தித்தது. அபிஷேக் ஷர்மா 15 ரன் எடுத்து தேஷ்பாண்டே வேகத்தில் வெளியேற மேலும் பின்னடைவு ஏற்பட்டது.

இதனால் ஐதராபாத் அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன் எடுத்தது. இதன் மூலம் 78 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. மார்க்ரம் அதிகபட்சமாக 32 ரன் (26 பந்து, 4 பவுண்டரி) விளாசினார். சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சில் தேஷ்பாண்டே 4 விக்கெட், முஸ்டபிர் ரகுமான், பதிரானா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சென்னை சூப்பர் கிங்ஸ் 9 போட்டியில் 5வது வெற்றியை பதிவு செய்து 3 வது இடத்துக்கு முன்னேறியது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 9 போட்டியில் 5 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 4 வது இடத்தில் உள்ளது.

The post ஐதராபாத்துக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி: 3 வது இடத்துக்கு முன்னேற்றம் appeared first on Dinakaran.

Tags : Chennai Super Kings ,Hyderabad ,Chennai ,IPL league ,Sunrisers Hyderabad ,MA Chidambaram Stadium ,Chepakkam ,Sunrisers ,Cummins ,Dinakaran ,
× RELATED சென்னையில் மோசமான வானிலை காரணமாக 14 விமானங்கள் திடீர் ரத்து