சென்னை: பாஜவில் மக்களவை தேர்தல் நேரத்தின் போது நடந்த பணம் விநியோக பிரச்னை, போஸ்டர் யுத்தம், காவல் நிலையத்தில் எப்ஐஆர் புகார் எதிரொலியாக சென்னையில் அண்ணாமலை தலைமையில் இன்று நடைபெற இருந்த பாஜ ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் ஒரேகட்டமாக கடந்த 19ம் தேதி நடந்த மக்களவை தேர்தலில் பாஜ 19 தொகுதிகளில் போட்டியிட்டது.
பாஜ கூட்டணியில் வேலூரில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பெரம்பலூரில் ஐஜேகே தலைவர் பாரிவேந்தர், சிவகங்கையில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் தலைவர் தேவநாதன் யாதவ், தென்காசியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் ஆகியோர் பாஜவின் தாமரை சின்னத்தில் போட்டியிட்டனர். மொத்தம் 23 தொகுதியில் பாஜவின் தாமரை சின்னத்தில் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டனர்.
பாஜவினர் தேர்தலில் யாருக்கும் பணம் தர மாட்டார்கள் என்று கட்சி தலைவர் அண்ணாமலை மேடைக்கு மேடை பேசி வந்தார். ஆனால் கோவை தொகுதியில் பாஜ சார்பில் பணம் கொடுத்து பலர் சிக்கிய சம்பவம் வெட்ட வெளிச்சமானது. நயினார் நாகேந்திரனின் உதவியாளரிடம் 4 கோடி பணம் சிக்கியது முதல் பல மோசடிகளில் மக்களவை தேர்தலின்போது பாஜ ஈடுபட்டது அம்பலமானது. அதேநேரத்தில், தேர்தல் செலவுக்காக மத்திய சென்னை தொகுதியில் 18 சி, வடசென்னையில் 12 சி, தென்சென்னையில் 15 சி, கோவைக்கு 25 சி என்று வேட்பாளர்களுக்கு ஏற்ற மாதிரி செலவுக்காக பணம் வழங்கப்பட்டது.
கடந்த தேர்தலின் போது பாஜவினர் தேர்தல் செலவுக்கு ஆர்எஸ்எஸ் மூலம் பணம் வழங்கப்பட்டது. அவர்கள் ஒவ்வொரு செலவுக்கும் வேட்பாளர்களிடம் கணக்கு கேட்டனர். இதனால், பணத்தை வேட்பாளர்கள் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த முறை நேரடியாக வேட்பாளர்கள் மூலம் தொகுதி பொறுப்பாளர்களுக்கு பணம் வழங்கப்பட்டது. அவர்களும் முறையாக பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு தேர்தல் முடிந்ததும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. நிர்வாகிகள் பெருமளவில் பணத்தை சுருட்டிக்கொண்டதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
பாஜவில் 90 சதவீதம் பேர், சொத்துகளை பாதுகாப்பதற்காகவும், கொலை, கொள்ளை குற்றச்சாட்டில் இருந்து தப்பிப்பதற்காகவும்தான் பாஜவில் இணைந்தனர். இதனால், இதுதான் சமயம் என தேர்தல் செலவுக்காக வழங்கப்பட்ட பணத்தை வாரி சுருட்டிக் கொண்டதாக, கட்சிக்காக ஆண்டாண்டுகாலம் தங்கள் சொந்த செலவில் கட்சியை வளர்க்க பாடுபட்டவர்கள் குமுறி வருகின்றனர். கட்சி மேலிடம் வழங்கிய பணம் கீழ்மட்ட நிர்வாகிகளுக்கும் செல்லவில்லை. வாக்காளர்களுக்கும் வழங்கப்படவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது பாஜ சார்பில் வாட்ஸ் அப் குரூப்களில் பாஜவை சேர்ந்த நிர்வாகிகள் ஆடியோ பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். பல பதிவுகளில் கட்சிக்காக பல ஆண்டு உழைத்து உள்ளோம். ஆனால் மண்டல தலைவர்கள் மேலிடம் கொடுத்த பணத்தை மொத்தமாக அபகரித்துக்கொண்டனர். கட்சிக்காக பாடுபட்ட எங்களுக்கு பணம் வந்து சேரவில்லை என்ற ரீதியில் ஆதங்கத்தை வெளிப்படுத்த தொடங்கி உள்ளனர்.
வடசென்னை தொகுதிக்கு உட்பட்ட பெரம்பூர் தெற்கு மண்டல் தலைவர் பிரபா, பெரம்பூர் மத்திய மண்டல தலைவர் கஸ்தூரி, திரு.வி.க நகர் மண்டல தலைவர் முரளி ஆகியோருக்கு எதிராக பல்வேறு ஆடியோ மெசேஜ்கள் தொடர்ந்து வாட்ஸ் அப் குரூப்புகளில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அந்த ஆடியோவில் ஒரு பூத்துக்கு மேலிடம் ரூ.8000 வழங்கியது, அதில் ரூ.5000 மட்டுமே மண்டல் தலைவர்கள் செலவு செய்தார்கள். மீதியை சுருட்டி விட்டார்கள், ஒரு மண்டல தலைவருக்கு குறைந்தபட்சம் 70 பூத்துகள் வரை வருகிறது.
அப்படியிருக்க ரூ.2 லட்சம் வரை கையாடல் செய்துள்ளார்கள். கட்சிக்காக உழைத்தவர்களுக்கு பணம் தரவில்லை என உள்ளது. பெரம்பூர் தெற்கு மண்டல பகுதியில் பாஜவை சேர்ந்த ஒருவர் பதிவிட்டுள்ள ஆடியோ மெசேஜில், கட்சியில் உழைத்தவர்களுக்கு எதுவும் வரவில்லை. மண்டல தலைவர்கள் பணத்தை கையாடல் செய்துள்ளார்கள் என்ற ரீதியில் பேசியுள்ளனர். இதுபோன்று ஒவ்வொரு மண்டல பகுதியிலும் கட்சி நிர்வாகிகள் பதிவிட்டு வருகின்றனர். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதே நேரத்தில் நடிகை ராதிகா போட்டியிட்ட விருதுநகர் தொகுதியில் தேர்தல் செலவுக்கு வழங்கப்பட்ட ரூ.40 லட்சத்தை பாஜ நிர்வாகிகள் சுருட்டியதாக சொந்த கட்சியினரே போஸ்டர் ஒட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சில தினங்களுக்கு துரைப்பாக்கத்தில் பூத் ஏஜென்ட்க்கு பணம் ஏன் கொடுக்கவில்லை என்ற தகராறு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து வாசு, வெங்கட், ஜெயகுமார் ஆகியோரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
சென்னை அமைந்தகரை அய்யாவு திருமண மண்டபத்தில் மத்திய சென்னை தொகுதி பாஜ தலைமை பணிமனையில் நேற்று முன்தினம் அமர்ந்திருந்த அண்ணாநகர் வடக்கு மண்டல தலைவர் ராஜ்குமாரை மத்திய வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்தி என்பவர் பளார் என கன்னத்தில் அறைந்துள்ளார். இருவரும் மாறி, மாறி தாக்கி கொண்டு பயங்கர மோதலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அமைந்தகரை இன்ஸ்பெக்டர் கிருபாநிதி தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் விரைந்து வந்து சமாதானப்படுத்தினர்.
பின்னர் இருவரும், அமைந்தகரை போலீசில் புகார் செய்தனர். முதற்கட்ட விசாரணையில், “தேர்தல் பணிக்காக பாஜ சார்பில் வாட்ஸ் அப் குருப்பில் கட்சி சார்பாக பதிவு செய்து வந்துள்ளனர். அந்த குருப்பில் மூர்த்தி, ராஜ்குமார் இடையே தகராறு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் வாட்ஸ் குரூப்பில் திட்டிக் கொண்டனர். ஆத்திரமடைந்த ராஜ்குமார், வாட்ஸ் அப் கால் மூலம் மூர்த்திக்கு போன் செய்து ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் மூர்த்தி பாஜவில் சீனியர் என்றும் ராஜ்குமார் என்பவருக்கு அண்ணாநகர் வடக்கு மண்டல தலைவர் பதவி கொடுத்ததில் ஏற்கனவே இருவருக்கும் மோதல் ஏற்பட்டதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக மூர்த்தி, ராஜ்குமாரை தாக்கியது தெரியவந்தது. இதனையடுத்து அமைந்தகரை போலீசார் மூர்த்தி, ராஜ்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பணத்தகராறு காரணமாக தான் இந்த பிரச்னை வெடித்ததாக பாஜ வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இப்படி தேர்தலில் பணம் விநியோக பிரச்னை தொடர்பாக பாஜ தலைமைக்கு தொடர்ந்து புகார் மேல் புகார் வந்து கொண்டிருக்கிறது.
தேர்தல் ரிசல்ட் வருவதற்குள் கட்சிக்குள் இப்படி புகார் வருவது தலைமைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பாஜ தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை பாஜ தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற இருந்த மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் கூட்டம் அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பண பிரச்னையில் நிர்வாகிகள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது பாஜவில் தற்போது பரபரப்பு டாபிக்காக இருந்து வருகிறது. இதனால் தொண்டர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
*பாஜவில் 90 சதவீதம் பேர், சொத்துகளை பாதுகாப்பதற்காகவும், கொலை, கொள்ளை குற்றச்சாட்டில் இருந்து தப்பிப்பதற்காகவும்தான் பாஜவில் இணைந்தனர். இதனால், இதுதான் சமயம் என தேர்தல் செலவுக்காக வழங்கப்பட்ட பணத்தை வாரி சுருட்டிக் கொண்டதாக, கட்சிக்காக ஆண்டாண்டுகாலம் தங்கள் சொந்த செலவில் கட்சியை வளர்க்க பாடுபட்டவர்கள் குமுறி வருகின்றனர்
The post தேர்தலில் பணப்பட்டுவாடா, போஸ்டர் யுத்தம், போலீசில் புகார் எதிரொலி; அண்ணாமலை தலைமையில் இன்று நடக்க இருந்த பாஜ ஆலோசனை கூட்டம் திடீர் ரத்து: பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.