×
Saravana Stores

சந்தேஷ்காலி விவகாரம் சிபிஐ விசாரணைக்கு தடை கோரி மே.வங்க அரசு மனு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

புதுடெல்லி: சந்தேஷ்காலி பெண்கள் பாலியல் பலாத்காரம், நில அபகரிப்பு தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க தடை கோரி மேற்குவங்க அரசு தொடர்ந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. மேற்குவங்கத்தில் கொரோனா காலகட்டத்தில் ரேஷன் பொருள் விநியோகத்தில் ஊழல் விவகாரம் குறித்து விசாரிக்க சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் ஷேக் ஷாஜகான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

இந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த ஷேக் ஷாஜகான் கடந்த பிப்ரவரி 29ம் தேதி கைது செய்யப்பட்டார். அதிகாரிகள் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரிக்க சிபிஐ மற்றும் மாநில காவல்துறை அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து கடந்த ஜனவரி 17ம் தேதி கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே ஷேக் ஷாஜகானும், அவரது கூட்டாளிகள் சிலரும் பொதுமக்களின் நிலங்களை அபகரித்ததாகவும், பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், பெண்கள் பாலியல் துன்புறுத்தல், நில அபகரிப்பு குறித்து சிபிஐ விசாரணை நடத்த கடந்த வாரம் உத்தரவிட்டது.

இந்நிலையில் பெண்கள் பாலியல் புகார், நில அபகரிப்பு புகார் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க கோரி மேற்குவங்க அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீது நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சந்தீப் மேத்தா ஆகியோர் அமர்வு இன்று விசாரணை நடத்த உள்ளது.

 

The post சந்தேஷ்காலி விவகாரம் சிபிஐ விசாரணைக்கு தடை கோரி மே.வங்க அரசு மனு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை appeared first on Dinakaran.

Tags : Bengal government ,CBI ,Supreme Court ,New Delhi ,West Bengal government ,West Bengal ,M.Bengal government ,Dinakaran ,
× RELATED நீதிதேவதை சிலையில் மாற்றம் செய்ய...