டாமன்: யூனியன் பிரதேசமான டாமனில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில்,‘‘ ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இடஒதுக்கீட்டை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்.கடந்த காலங்களில் ஆர்எஸ்எஸ் தலைவர் இடஒதுக்கீட்டு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இடஒதுக்கீட்டை எதிர்த்து பேசியவர்கள் அவர்களுடைய(ஆர்எஸ்எஸ்) கட்சியில்(பாஜ) சேர்த்து கொள்ளப்படுகின்றனர். ஆர்எஸ்எஸ்சும்,பாஜவும் அரசியலமைப்பு மற்றும் இதர அமைப்புகளை ஒழித்து விட்டு 20 கோடீஸ்வரர்களின் துணையோடு தங்களை நாட்டின் மன்னராக முடிசூட்டி கொள்ள நினைக்கின்றனர்.பாஜவுக்கும், காங்கிரசுக்கும் இடையேயான மோதல் சித்தாந்த ரீதியானது.
நாட்டின் அடிப்படை கட்டமைப்பு அரசியல் சட்டம். அதில் இருந்து தான் பல்வேறு அமைப்புகள் உருவாயின. அரசியல் சட்டத்தை மாற்ற பாஜ திட்டமிட்டுள்ளது. ஆனால், அரசியல் சட்டத்தை பாதுகாக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. அரசியல் சட்டத்தின் மூலம் ஜனநாயகம், வாக்களிக்கும் உரிமை, இட ஒதுக்கீடு போன்ற கோடிக்கணக்கான மக்களுக்கு வாழ்வளிக்கும் திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியவை ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு தலைவர்(அமைப்பு) கொண்டு வருவதற்கான கோஷங்களை எழுப்புகின்றன. தமிழ்நாடு, மேற்கு வங்கம், குஜராத் மாநில மக்கள் அந்தந்த மாநில மொழியான தமிழ், பெங்காலி, குஜராத்தி மொழியை தான் பேசுவது இயல்பு. ஆனால் நாட்டில் ஒரே மொழி என்று செயல்படுத்தினால் தமிழ், பெங்காலி, குஜராத்தி போன்ற மாநில மொழிகள் நிலை என்னவாகும். ஒன்றியத்தில் காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்டதும் பெண்களின் வங்கி கணக்கில் ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் செலுத்தி அவர்களை லட்சாதிபதியாக்குவோம்’’ என்றார்.
The post ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு தலைவர் கொள்கையை முன்நிறுத்தும் பாஜ: ராகுல் காந்தி கடும் கண்டனம் appeared first on Dinakaran.