லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ்வில் பயணிகள் நிறைந்த பேருந்து, வேகமாக வந்த டிரக் மீது மோதியது. இந்த கோர விபத்தில், 6 பேர் உயிரிழந்தனர், 20 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து காவல்துறை மற்றும் மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். காயமடைந்தவர்களை அப்பகுதி மக்கள் உதவியுடன் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சஃபிபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜமால்திபூரில் இந்த விபத்து நடந்துள்ளது. பங்கர்மாவில் இருந்து உன்னாவ் நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்தது. ஜமால்திபூர் கிராமம் அருகே சென்றபோது, எதிரே வேகமாக வந்த லாரி மோதியது. பேருந்தின் ஒரு பக்கத்தை லாரி துண்டிக்கும் அளவுக்கு விபத்து ஏற்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான பேருந்தில் 20 பயணிகள் பயணம் செய்தனர். விபத்துக்குப் பிறகு, லாரி டிரைவர் தலைமறைவானார். விபத்துக்குப் பிறகு லாரி டிரைவரைப் பிடிக்க மாவட்டம் முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் யோகி இரங்கல் தெரிவித்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
The post உத்திரபிரதேசத்தில் பேருந்து – லாரி மோதி விபத்து: 6 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.