×
Saravana Stores

ஒரே இடத்தில் வாக்கு சேகரிக்க சென்றபோது ஒய்எஸ்ஆர் காங்.-ஜனசேனா கட்சியினர் நடுரோட்டில் ஆக்ரோஷ மோதல்: திருப்பதியில் பரபரப்பு

திருமலை: திருப்பதியில் ஒரே இடத்தில் வாக்கு சேகரிக்க சென்ற ஒய்எஸ்ஆர் காங்கிரசாருக்கும், ஜனசேனா உள்ளிட்ட கூட்டணி கட்சியினருக்கும் இடையே நடுரோட்டில் மோதல் ஏற்பட்டு ஒருவரையொருவர் ஆக்ரோஷமாக தாக்கிக்கொண்டனர். ஆந்திராவில் வரும் 13ம்தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. மாநிலத்தில் ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தனி அணியாகவும், தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக ஒரு அணியாகவும், காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு அணியாகவும் போட்டியிடுகின்றன. இதனால் மும்முனை போட்டி நிலவுகிறது.

தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளதால் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாநிலத்திலேயே திருப்பதி சட்டமன்ற தொகுதியில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இங்கு ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக தற்போதைய எம்எல்ஏவும், தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவருமான கருணாகரரெட்டியின் மகன் அபினய்ரெட்டி ேபாட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தெலுங்கு தேசம் கூட்டணி சார்பில் ஜனசேனா வேட்பாளராக சித்தூர் முன்னாள் எம்எல்ஏ ஆரணி நிவாசலு போட்டியிடுகிறார். திருப்பதி தொகுதியில் இவர்களிடையே கடும் பலப்பரீட்சை நிலவுகிறது.

இந்நிலையில் நேற்று திருப்பதி தொகுதிக்குட்பட்ட கிரிபுரத்தில் வேட்பாளர் ஆரணி னிவாசலுவுடன் ஜனசேனா மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரித்தனர். அதேபகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரும் வாக்கு சேகரிக்க வந்தனர். அப்போது ஒய்எஸ்ஆர் காங். கட்சியினரை பார்த்து, `எங்கள் கூட்டணிக்கே வெற்றி’ என ஜனசேனா கட்சியினர் முழக்கமிட்டனர். இதைக்கண்ட ஒய்எஸ்ஆர் காங்கிரசார், `தோற்பவர்களுக்கு வாக்களிக்காதீர்கள், எங்களுக்கே வாக்களித்து மீண்டும் வெற்றி பெறச்செய்யுங்கள்’ என எதிர் முழக்கமிட்டு வாக்கு சேகரித்தனர்.

இதனால் இருகட்சியினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. வேட்பாளர் முன்னிலையில் ஒருவரையொருவர் நடுரோட்டில் ஆக்ரோஷமாக தாக்கிக்கொண்டனர். அப்போது பாதுகாப்புக்கு வந்த போலீசார் இருதரப்பையும் சமரசப்படுத்தி மோதலை விலக்கிவிட்டனர். இந்த மோதல் குறித்து வேட்பாளர் ஆரணி னிவாசலு மற்றும் கட்சியினர் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் நேற்றிரவு புகார் அளித்தனர். அதில், ஆளுங்கட்சியினர் வேண்டுமென்றே பிரசாரத்தின்போது தங்களிடம் மோதல் போக்கில் ஈடுபட்டதாக அதில் தெரிவித்துள்ளனர்.

The post ஒரே இடத்தில் வாக்கு சேகரிக்க சென்றபோது ஒய்எஸ்ஆர் காங்.-ஜனசேனா கட்சியினர் நடுரோட்டில் ஆக்ரோஷ மோதல்: திருப்பதியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : YSR KONG ,JANASENA ,NADUROT ,Thirumalai ,YSR ,Tirupati ,13th parliamentary election ,Andhra Pradesh ,Dinakaran ,
× RELATED மணல் முறைகேடு குறித்து புகார்...