×

சிக்னல் கோளாறால் சென்னை ரயில் நடுவழியில் நிறுத்தம்: பயணிகள் அவதி

ஜோலார்பேட்டை: வாணியம்பாடி அருகே சிக்னல் கோளாறால் சென்னையில் இருந்து சென்ற மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சென்னையில் இருந்து காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம் வழியாக கர்நாடக மாநிலம் மங்களூர் வரை செல்லும் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னையில் இருந்து நேற்று மாலை 4.20 மணியளவில் புறப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கேதாண்டப்பட்டி ரயில் நிலையம் அருகே வந்தபோது, சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளது. ரயிலுக்கு முழுமையாக சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் உடனடியாக ரயில் நடுவழியில்நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த கேதாண்டப்பட்டி ரயில்வே அதிகாரிகள் ஜோலார்பேட்டை ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது சேலம் மார்க்க கோட்டத்தில் ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக இங்கு சிக்னல் கிடைக்காமல் ரயில் நின்றது தெரியவந்தது. இதையடுத்து சுமார் அரை மணி நேரத்திற்கு பின் சிக்னல் கிடைத்தது. அதன்பிறகு மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. சிக்னல் கோளாறு காரணமாக ஜோலார்பேட்டைக்கு வழக்கமாக இரவு 7.28 மணிக்கு வரவேண்டிய மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில், தாமதமாக இரவு 8.47 மணியளவில் வந்தது. பின்னர் 3 நிமிடம் கழித்து மீண்டும் மங்களூர் நோக்கி புறப்பட்டது. ரயில் நடுவழியில் நின்று தாமதமாக புறப்பட்டதால் ரயிலில் இருந்த பயணிகள், ரயிலுக்கு காத்திருந்த பயணிகள் உரிய நேரத்திற்கு தங்கள் பகுதிக்கு செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர்.

The post சிக்னல் கோளாறால் சென்னை ரயில் நடுவழியில் நிறுத்தம்: பயணிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Jollarpet ,Mangalore ,Express ,Vaniyampadi ,Mangalore Express ,Karnataka ,Katpadi ,Jolarpet ,Salem ,
× RELATED ஜோலார்பேட்டை அருகே எரிகல் விழுந்த பகுதியில் செல்பி எடுக்க திரளும் மக்கள்