×
Saravana Stores

ஜோலார்பேட்டையில் பணிகள் விறுவிறுப்பு; ரூ.16 கோடியில் நவீனமயமாகும் ரயில் நிலையம்: பயணிகள் மகிழ்ச்சி

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை ரயில் நிலையம் ₹16 கோடியில் நவீனமாயமாகும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை என்றதும் நினைவுக்கு வருவது ரயில் நிலையமும், ஏலகிரி மலையும்‌. இதில், 1809ம் ஆண்டு பிரிட்டிஷ் ராணுவ மையம் உருவாக்கப்பட்டது. அப்போது சென்னையில் உள்ள குடியேற்ற நிர்வாகத்துடன் புதிய சிவில் மற்றும் ராணுவ புற காவல் இடையே அதிக போக்குவரத்து தொடர்பு இருந்ததால் 1845ம் ஆண்டு மெட்ராஸ் ரயில்வே கம்பெனி தொடங்கப்பட்டது.

சென்னை ராயபுரம் – வாலாஜா ரோடு பாதை பணியை தொடங்கியது. 1856ம் ஆண்டு ராயபுரம் – வாலாஜா ரோடு பணி முடிந்து தென்னகத்தின் முதல் பயணிகள் ரயில்வே தொடங்கியது. பின்னர் பெங்களூர் -ஜோலார்பேட்டை இடையில் 149 கி.மீ அகல பாதை அமைக்க திட்டமிட்டு அதற்கான பணிகளை மேற்கொள்ள ஜாலர் என்ற ஆங்கிலேயர் ஜோலார்பேட்டையில் தங்கி ரயில்வே பணிகளை மேற்கொண்டார்.

அதன் பிறகு 1864ம் ஆண்டு ஜோலார்பேட்டை முதல் பெங்களூர் கன்டோன்மென்ட் வரை பணிகள் முடிந்து பெங்களூர் மெயின் ரயில் சேவை தொடங்கியது. இந்த ரயில் நிலைய பணிகளை மேற்கொண்ட ஜாலர் என்ற ஆங்கிலேயரின் பெயரைக் கொண்டு தற்போது ஜோலார்பேட்டை என்று அழைக்கப்படுகிறது. ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய வானிலை தொலைநோக்கு நிலையம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட காவலூரில் உள்ளது. இதனை தொடங்கி வைக்க அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி மற்றும் மத்திய அமைச்சராக இருந்த ரங்கராஜன் குமாரமங்கலம் ஆகியோர் சென்னையில் இருந்து காவலூர் வர ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அடையாளமாக இருந்தது.

இத்தகைய சிறப்புமிக்க ஜோலார்பேட்டை ரயில் நிலையம் தமிழகத்தில் 2வது பெரிய ரயில் நிலையம் ஆகும். தினமும் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மாதத்திற்கு கோடிக்கணக்கில் ரயில்வே நிர்வாகத்திற்கு வருமானம் ஈட்டப்படுகிறது. பல்வேறு முக்கிய மாநிலங்களை இணைக்கும் ரயில் நிலையங்களில் ஒன்றாக இருந்து வருவதால், சென்னை, கோவை, கேரளா, பெங்களூர், ஆகிய மார்க்கங்களில் நாள்தோறும் 100க்கும் மேற்பட்ட ரயில்கள் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வழியாக இயக்கப்படுகிறது.

இத்தகைய ரயில் நிலையம் அடிப்படை வசதி இன்றி மேம்படுத்தப்படாமல் இருந்து வந்தது. இதனால் பல்வேறு தரப்பினரும் ரயில்வே நிர்வாகம் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை ஆகியோரிடம் ரயில் நிலையத்தை நவீன வசதியுடன் மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதன் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் அவ்வப்போது ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய ரயில் நிலையங்களை மேம்படுத்துவதும் நவீனப்படுத்துவதும் குறித்து கோரிக்கை வைத்து வந்தார். இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடி இந்தியா முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்காக காணொலி காட்சி மூலம் பணியை துவக்கி வைத்தார்.

அதில், ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை மேம்படுத்துவதற்காக ₹16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதேபோன்று திருப்பத்தூர் ரயில் நிலையம் ₹7 கோடி மதிப்பீட்டிலும், திருவண்ணாமலை ரயில் நிலையம் ₹9 கோடி மதிப்பீட்டிலும் நவீன மயமாக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக ரயில் பயணிகள் பெரியோர் முதல் சிறியவர்கள் வரை எளிமையாக பிளாட்பாரங்களை கடக்க லிப்ட் வசதியும், எஸ்கலேட்டர் வசதி, புதிய டிக்கெட் கவுன்டர்கள், ரயில்வே துறை சார்ந்த அலுவலகங்கள், கார் பார்க்கிங், டூவீலர் பார்க்கிங், பயணிகள் வெயிட்டிங் அறை, தங்கும் அறை, கழிவறை வசதி, குடிநீர் வசதி, கேண்டின் என அடிப்படை வசதியுடன் நவீன மயமாக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் சில மாதங்களுக்குள் பணிகள் நிறைவு பெற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு நவீனமயத்துடன் மேம்படுத்தப்பட்ட புதிய ரயில் நிலையமாக ஜோலார்பேட்டை ரயில் நிலையம் புதுப்பொலிவுடன் காட்சியளிக்க உள்ளதால் ரயில் பயணிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post ஜோலார்பேட்டையில் பணிகள் விறுவிறுப்பு; ரூ.16 கோடியில் நவீனமயமாகும் ரயில் நிலையம்: பயணிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Jollarpet ,railway station ,Jolarpet ,Tirupathur district ,Elagiri hill ,British military center ,station ,
× RELATED ஜோலார்பேட்டை வாரச்சந்தையில் தீபாவளி...