×
Saravana Stores

சரியாக உழைத்தால் வெற்றி; பட்டய கணக்காளர் ஆவது எளிது: எஸ்ஐஆர்சி தலைவர் ராகவன் ஊக்கம்

சென்னை: சரியாக உழைத்தால் பட்டய கணக்காளராக தேர்ச்சி பெறுவது எளிது தான் என இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தின் தென்மண்டல தலைவர் நரசிம்ம ராகவன் தெரிவித்தார். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தினகரன் நாளிதழ் நடத்தும் மாபெரும் கல்வி கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சியில் இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தின் தென்மண்டல பிரிவு சார்பில் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அரங்கில் அந்நிறுவத்தின் செயலாளர் மதுமிதா, மாணவர்கள் தலைவர் ரவிசந்திரன், இணை தலைவர் பிரியா ஆகியோர் பட்டய கணக்காளர் படிப்பு குறித்து மாணவர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு தீர்வு வழங்கினர். மேலும் அரங்கில் இருந்த 3 பேரும் பட்டய கணக்காளர்கள் என்பதால் மிகவும் எளிதாக இந்த படிப்பில் எப்படி வெற்றி பெறுவது என்பது குறித்து மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினர்.

மேலும் பட்டய கணக்காளர் படிப்பு குறித்தும், இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் குறித்தும் அதன் தென்மண்டல தலைவர் நரசிம்மா ராகவன் கூறியதாவது:
இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் என்பது நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் நிறுவனம். பட்டய கணக்காளர் என்பதற்கு சான்று வழங்கும் ஒரே நிறுவனம் இது மட்டும் தான். எந்த இடத்தில் பட்டய கணக்காளர் பயிற்சி பெற்றாலும், அல்லது சுயமாக படித்து வந்தாலும் சான்றிதழ் என்பது இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் மூலம் தான் வழங்கப்படும். இவை தவிர இந்நிறுவனத்தில் பட்டய கணக்காளர் பயிற்சியும் வழங்கப்படுகிறது. 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள், இளநிலை பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

12ம் வகுப்பு முடித்த மாணவர்வர்களுக்கு அடித்தளம், இடைநிலை, இறுதி கட்டம் என 3 கட்டங்களாக பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இளைநிலை பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு அடித்தளம் தவிர மீதம் 2 கட்டங்களில் மட்டும் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. பட்டய கணக்காளராக 3 கட்ட பயிற்சிக்கும் சேர்த்து மொத்தமாக ரூ.77,000 மட்டுமே கட்டணம் பெறப்படுகிறது. இதில் பட்டய கணக்கு பயிற்சியோடு மட்டும் இல்லாமல் தற்போதைய காலக்கட்டத்திற்கு தேவையான கணிணி அறிவு, தொடர்பு திறன் ஆகிய கூடுதல் பயிற்சியும் வழங்கப்படுகிறது. மேலும் படிக்கும் போதே நேரடியாக பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 13 இடங்களில் இந்நிறுவனம் உள்ளது.

பயிற்சி மையத்தில் படித்தாலும், சுயமாக வீடுகளில் இருந்து படித்தலும் தினமும் 2 மணி நேரம் படித்தால் பட்டய கணக்கு தேர்வுகளில் வெற்றி பெறலாம், தேர்வு நேரத்தின் போது மட்டும் படித்தால் தேர்ச்சி பெறுவது சற்று கடினமாகும். ஆனால் பொதுவாக பட்டய கணக்காளர் படிப்பு கடினம் என்ற மனநிலை உள்ளது. உலகம் முழுவதும் பணியாற்ற கூடிய அளவிற்கு நமது பட்டய கணக்கு சான்றிதழ் தகுதி பெற்று இருக்கிறது. அதனால் பட்டம் பெறுவதற்கு கடினமாக சூழல்களை எதிர்கொள்ள வேண்டியிருகிறது, ஆனால் சரியாக உழைத்தால் பட்டய கணக்காளராக தேர்ச்சி பெறுவது எளிது தான். இவ்வாறு அவர் கூறினார்.

The post சரியாக உழைத்தால் வெற்றி; பட்டய கணக்காளர் ஆவது எளிது: எஸ்ஐஆர்சி தலைவர் ராகவன் ஊக்கம் appeared first on Dinakaran.

Tags : SIRC ,President ,Raghavan Moke ,Chennai ,Narasimha Raghavan ,South Zone ,Institute of Chartered Accountants of India ,Dinakaran Daily ,Nandambakak, Chennai ,Raghavan Mokam ,Dinakaran ,
× RELATED ஆட்சி அதிகாரத்தில் பங்கு என விஜய்...