வேலூர், ஏப்.28: வாக்கு எண்ணும் பணிக்கு அலுவலர்கள் குலுக்கல் முறையில் நியமிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த 19ம் தேதி நடந்தது. வேலூர் மாவட்டத்தில் 6 ஆயிரத்து 272 பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். இதுதவிர முறைகேடுகள், பண பட்டுவாடா, பரிசு பொருள் வினியோகம் போன்வற்றை கண்காணிக்க மாவட்டம் முழுவதும் பறக்கும் படைகள், கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். வாக்குப்பதிவு முடிந்ததால், அவர்கள் தேர்தல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். மேலும் தேர்தல் கண்காணிப்பாக கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு மையமும் கலைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஆந்திராவில் வரும் 13ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால், மாநில எல்லையில் உள்ள காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம் ஆகிய இடங்களில் 3 பறக்கும் படை, 3 கண்காணிப்பு குழுவினர் மட்டும் சுழற்சி முறையில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். மற்ற அனைவரும் தேர்தல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இதையடுத்து, அடுத்த கட்டமாக வாக்கு எண்ணும் பணிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒரு சட்டசபை தொகுதிக்கு 14 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ஒரு மேஜைக்கு கண்காணிப்பாளர், உதவி கண்காணிப்பாளர் மற்றும் ஒரு உதவியாளர் என 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஒரு தொகுதிக்கு 42 பேர் வீதம் 6 சட்டமன்ற தொகுதிக்கு 252 பேர் கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்களுக்கு வாக்கு எண்ணும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து விரைவில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதேபோல் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் ஜூன் 4ம் தேதி நடக்கும் வாக்கு எண்ணும் பணிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
The post குலுக்கல் முறையில் அலுவலர்கள் நியமனம் அதிகாரிகள் தகவல் ஜூன் 4ல் நடக்கும் வாக்கு எண்ணும் பணிக்கு appeared first on Dinakaran.