திண்டிவனம், ஏப். 28: டிராக்டர் மீது லாரி மோதியதில் தந்தை கண்முன்னே 3 வயது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த எடப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவா(45), விவசாயி. இவரது மனைவி ராதிகா(35). இவர்களுக்கு மனுநீதி(6), தேவவிருதன்(3) ஆகிய இரு ஆண் குழந்தைகள். இந்நிலையில் நேற்று காலை சிவா தனது இரு குழந்தைகளுடன் செங்கல்பட்டில் உள்ள தனது அக்காள் வீட்டிற்கு ஹாலோ பிளாக் கற்களை டிராக்டரில் ஏற்றிகொண்டு எடப்பாளையத்தில் இருந்து சென்றார். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை கூட்டேரிப்பட்டு மேம்பாலம் அருகே வந்த போது, பின்னால் வேகமாக வந்த லாரி ஒன்று டிராக்டர் மீது பலமாக மோதியது. விபத்தில் டிராக்டர் அதிர்ந்து சிறிது தூரம் வேகமாக சென்றது. இதையடுத்து சிவா டிராக்டரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்திவிட்டு, லாரி டிரைவரை கண்டித்துள்ளார்.
பின்னர் டிராக்டரில் பார்க்கையில் தனது இளைய மகன் தேவவிருதனை காணவில்லை என்று தேடிய போது, குழந்தை லாரியின் அடியில் சிக்கி படுகாயத்துடன் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதை தொடர்ந்து குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து புகாரின் பேரில், மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர். தந்தை கண்முன்னே குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
The post டிராக்டர் மீது லாரி மோதி விபத்து தந்தை கண்முன்னே 3 வயது குழந்தை பலி appeared first on Dinakaran.