நாகர்கோவில், ஏப்.28 : கடுமையான வெப்பத்தை அனுபவிக்கும் தலைமுறை நாம் தான். மனித தவறுகளால் கால நிலை மாறி போனது என்ற குமரி மாவட்ட வன அதிகாரி கூறினார். குமரி மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் , சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, குமரி மாவட்ட வனக்கோட்டத்துடன் இணைந்து பள்ளி மாணவர்களுக்கு கோடையில் இயற்கை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு முகாமை காளிகேசத்தில் நடத்தின. 10 பள்ளிகளில் இருந்து தலா 10 மாணவர்களும், ஒரு ஆசிரியரும் பங்கேற்றனர். குமரி மாவட்ட வன அலுவலரும், வன உயிரின காப்பாளருமான பிரசாந்த், இந்த முகாமில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு இயற்கை பாதுகாப்பு குறித்தும், கால நிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள நிலைகள் குறித்தும் விளக்கி பேசினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், தற்போது கடுமையான வெப்பம் நிலவி வருகிறது.
இவ்வளவு அதிகமான வெப்பத்தை அனுபவிக்கும் தலைமுறை நாமாக தான் இருப்போம். நமது முன்னோர்கள் இது போன்ற வெப்பத்தை அனுபவித்து இருக்க மாட்டார்கள். உங்கள் தாத்தா, பாட்டியிடம் கேளுங்கள். அவர்களுக்கு இப்போதுள்ள கால சூழ்நிலை, கடுமையான வெப்பம் ஆகியவை அதிர்ச்சியை கொடுக்கும். வளர்ச்சி என்பது முக்கியமானதாகும். ஆனால் அதே சமயத்தில் பல்லுயிர் தன்மைகள் பாதுகாக்கப்பட வேண்டும். கால நிலை மாற்றத்துக்கு மனித தவறுகளே முக்கியம் காரணம் ஆகும். எதிர்கால சந்ததிகள் இந்த தவறை செய்ய கூடாது. காடுகளில் தான் பல்லுயிர் தன்மை நிலவுகிறது. காடுகளை பாதுகாக்க வேண்டும். மரங்களை வளர்க்க வேண்டும். இயற்கை பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வனங்களை பாதுகாக்க அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
இம்முகாமில் கன்னியாகுமரி நேச்சர் பவுண்டேஷன் அமைப்பினர் வழிகாட்டியாக இருந்து மாணவர்களை காட்டிற்குள் அழைத்து சென்று பல விஷயங்களை விளக்கினார்கள். காலநிலை மாற்றம் மற்றும் அதன் தாக்கம் குறித்தும் எடுத்துரைத்தனர். மாணவர்களுக்கு வினாடி வினா, திருகு வெட்டு புதிர் போட்டிகளும் நடத்தப்பட்டன. இதில் கலந்துகொண்ட அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் மற்றும் புத்தகங்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன. மாவட்ட கால நிலை மாற்ற இயக்க பணியாளர் நீனா மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை அழகிய பாண்டியபுரம் வனச்சரகர் மணிமாறன் மற்றும் சரக பணியாளர்கள் செய்திருந்தனர்.
The post கடுமையான வெப்பத்தை அனுபவிக்கிறோம் கால நிலை மாற்றத்துக்கு மனித தவறுகளே காரணம்: குமரி வன அதிகாரி பேச்சு appeared first on Dinakaran.