×
Saravana Stores

திரவ உயிர் உரங்களை பயன்படுத்தி சாகுபடியில் அதிக லாபம் பெறலாம்: வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை

புதுக்கோட்டை, ஏப்.28: புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் சாகுபடி செலவை குறைத்து கூடுதல் லாபம் பெற திரவ உயிர் உரங்களை விவசாயிகள் பயன்படுத்தலாம் என்று வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி ஆலோசனை தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு வகையான பயிர்கள் விவசாயிகளால் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. விவசாயிகள் ரசாயன உரங்களை அதிகம் பயன்படுத்துவதால் மண்வளம் பாதிக்கப்படுவதோடு மட்டுமின்றி, நஞ்சுள்ள உணவு உற்பத்தியை மட்டும் தான் பெருக்க முடிகிறது. மேலும் சுற்றுப்புற சூழலும் பாதிக்கப்படுகிறது. ஆனால் உயிர் உரங்களை பயன்படுத்துவதன் மூலம் மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையை அதிகரித்து மண்வளம் பாதுகாக்கப்படுவதோடு, அதிக மகசூல் கிடைக்கவும் வாய்ப்பளிக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில், அன்னவாசல் வட்டாரத்தில் குடுமியான்மலையில் திரவ உயிர் உர உற்பத்தி மையம் இயங்கி வருகிறது. இங்கு ஆண்டுக்கு 55,000 லிட்டர் திரவ உயிர் உரம் தயாரிக்கப்பட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு அரசு வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலமாக விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மையத்தில் அசோஸ்பைரில்லம் (நெல்), அசோஸ்பைரில்லம் (இதரம்), ரைசோபியம் (பயறு), ரைசோபியம் (கடலை), பாஸ்போபாக்டீரியா, திரவ அசோபஸ்(நெல்),திரவ அசோபாஸ்(இதரம்) மற்றும் திரவ பொட்டாஷ் என 8 வகையான திரவ உயிர் உரங்கள், அனைத்து பயிர்களுக்கும் பயன்படும் வகையில் தயார் செய்யப்பட்டு வருகிறது. உயிர் உரங்களை பயன்படுத்துவதால் ரசயாயன உரங்களின் பயன்பாடு 20 முதல் 25 சதவீதம் வரை குறைவதோடு கூடுதல் லாபம் விவசாயிகளுக்கு கிடைக்கிறது. திரவ உயிர் உரங்கள் பல்வேறு அளவுகளில் பிரத்யேகமான கொள்கலன்களில் விநியோகம் செய்யப்படுகிறது. திரவ உயிர் உரங்களின் ஆயுட்காலம் 12 மாதங்கள் ஆகும். மேலும் நுண்ணுயிரிகளின் அடர்த்தி திட உயிர் உரங்களை விட திரவ உயிர் உரங்களில் கூடுதலாக இருக்கும். அகில இந்திய அளவில் தமிழகத்தில்தான் முதன் முறையாக பாக்டீரியாவை பிரித்தெடுக்கும் இணை ஒட்ட திரவ வடிப்பான் என்ற தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி உயிர் உரங்கள் தயாரிக்கப்படுகிறது.

அசோஸ்பைரில்லம் உயிர் உரமானது நெல், சோளம், கம்பு, கேழ்வரகு, பருத்தி, மிளகாய் போன்ற பயிர்களுக்கும், ரைசோபியம் உயிர் உரமானது நிலக்கடலை, பயறு வகை பயிர்களுக்கு தழைச்சத்தை நிலைப்படுத்துவும், பாஸ்போபாக்டீரியா உயிர் உரமானது அனைத்து பயிர்களுக்கும் மணிச்சத்தை கரைத்து பயிருக்கு கிடைக்கச் செய்யவும் மற்றும் திரவ பொட்டாஷ் உயிர் உரமானது மண்ணில் உள்ள சாம்பல் சத்தை கரைத்து பயிருக்கு கிடைக்கச்செய்யவும் பயன்படுத்தலாம். உயிர் உரங்களை பயன்படுத்துவதால், பயிர்வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மண்ணில் உயிரியல் செயல்பாட்டை அதிகப்படுத்துகிறது. பயிர்களுக்கு வறட்சியை தாங்கி வளரும் சக்தியை அளிக்கிறது. மண் மூலம் பரவும் நோய்களுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.

உயிர் உரங்களை ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி கொல்லிகளுடன் கலந்து உபயோகிக்க கூடாது. உயிர் உரங்களை குறைந்த வெப்பத்தில் நேரடி சூரியஒளி படாமல் பாதுகாப்பாக இருப்பு வைக்க வேண்டும். விதைகளை பூஞ்சாண கொல்லியுடன் விதை நேர்த்தி செய்த பின்தான் கடைசியாக உயிர் உரங்கள் விதை நேர்த்தி செய்ய வேண்டும். எனவே பதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் ரசாயன உரங்களை குறைத்து உயிர் உரங்கள் மற்றும் அங்கக உரங்களை பயன்படுத்தி சாகுபடி செலவை குறைத்து நிகர லாபத்தை அதிகரித்திட புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி கேட்டு கொண்டுள்ளார்.

The post திரவ உயிர் உரங்களை பயன்படுத்தி சாகுபடியில் அதிக லாபம் பெறலாம்: வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Pudukkottai ,Pudukkottai District ,Associate Director ,Peryasamy ,Dinakaran ,
× RELATED களைகட்டியது தீபாவளி சேல்ஸ்:...