×
Saravana Stores

காலப்போக்கில் கானல் நீரான பூம்பூம் மாடு

கந்தர்வகோட்டை, ஏப்.28: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதிகளில் முன்பெல்லாம் பூம்பூம் மாடு என்று சொல்லும் ஒரு மாட்டினை வண்ணத் துணிகளால் அலங்காரம் செய்து மாட்டின் கொம்பில் கலர் துணி சுற்றி மாட்டின் கழுத்தில் பித்தளை சலங்கை கட்டி, மாட்டின் கால்களில் சிறு சலங்கை கட்டியபடி அழைத்து வருவார்கள். சில மாடுகளுக்கு திமிலில் வித்தாசமான தோற்றமும் காணப்படும். இவ்வாறு அலங்கரிக்கப்பட்ட மாட்டினை உரிமையாளர்கள் வீடுவீடாக மாட்டினை அழைத்து வருவார்கள். மாட்டின் உரிமையாளர் கருநிற கோட்டு அணிந்து, முண்டாசு கட்டி, அடர்ந்த மீசை கொண்டு கம்பீரத்தோற்றத்துடன் சிறு மேளம் தட்டியபடி வீதி வீதியாக வலம் வருவார்கள்.

ஒவ்வொரு வீடுகளுக்காக சென்று நல்ல குறி சொல்லி அரிசி, நெல், காசு, பழைய துணிகள் வாங்கி செல்வார்கள். இவர்களிடம் குறி கேட்க ஒரு தனி கூட்டமே காத்திருக்கும். பூம்பூம் மாடுகள் பற்றிய சினிமா பாடல்கள் அதிகளவில் உள்ளது. அதில் பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தாண்டி, டும்.. டும்.. மேளம் கொட்டி சேதி சொன்னாண்டி என்ற பாடல் பிரசித்தி பெற்றது. பூம் பூம் மாடுகளை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காத்திருந்து பார்ப்பார்கள். பூம் பூம் மாட்டுக்காரர் சொல்லும் குறியை அக்கால மக்கள் முழுமையாக நம்பினார்கள்.

எதிர்மறை வார்த்தைகள் இல்லாமல் மக்கள் மனம் குளிரும்படி செய்தி சொல்லுவது இவர்களது பண்பு. யாரிடமும் கண்டித்து பொருட்கள் வாங்குவதில்லை, அவர்கள் கொடுக்கும் பொருட்களை மனதார வாங்கி செல்வார்கள். வளர்ந்து வரும் நவீன காமத்தில் தற்போது பூம் பூம் மாடுகள் இல்லாமலே போய்விட்டது. பூம் பூம் மாடு கண்ட கடைசி தலைமுறை நாமாகத்தான் இருப்போம். என்று என்னத்தோன்றுகிறது. பழமை மாறும் நிலையில் பூம்பூம் மாடுகளும் ஒன்று.

The post காலப்போக்கில் கானல் நீரான பூம்பூம் மாடு appeared first on Dinakaran.

Tags : BOOMBOOM COW ,Kandarvakota ,Kandarvakottai ,Pudukkottai district ,Bumboom ,Dinakaran ,
× RELATED கந்தர்வகோட்டையில் விபத்தில்லா தீபாவளி கொண்டாட விழிப்புணர்வு