×
Saravana Stores

நைனிடாலில் பயங்கர காட்டு தீ

* தீ அணைப்பு பணியில் ராணுவம், விமானப்படை
* படகு சவாரி ரத்து

டேராடூன்: உத்தரகாண்டின் நைனிடால் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டு தீயை அணைக்கும் பணியில் விமானப்படை மற்றும் ராணுவம் களமிறங்கி உள்ளது. உத்தரகாண்ட் மாவட்டம் ஹல்த்வானி மாவட்டம் நைனிடால் மலைப்பகுதியில் கடும் வெப்பம் காரணமாக காட்டு தீ ஏற்பட்டுள்ளது. காட்டு பகுதியில் ஏற்பட்ட தீ மெல்ல, மெல்ல நகரத்துக்கும் பரவி வருகிறது. பல மணி நேரம் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் மாவட்ட நிர்வாகமும், தீயணைப்பு துறையினரும் ஈடுபட்டுள்ளனர். நைனிடால் மாவட்ட தலைமையகம் அருகே பற்றி எரியும் காட்டு தீ பைன்ஸ் பகுதியில் உள்ள ஹைகோர்ட் காலனி குடியிருப்பு மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் அங்கு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்டின் பல்வேறு பகுதிகளில் 36 மணி நேரத்தில் 31 தீ விபத்து சம்பவங்கள் பதிவாகி உள்ளது. இதில் 33.34 ஹெக்டேர் வனப்பகுதி அழிந்து விட்டது. இந்நிலையில் தீயை கட்டுப்படுத்தி அணைக்கும் பணியில் இந்திய விமான படை மற்றும் ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. அதன்படி எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர்கள் பீம்டால் ஏரியில் இருந்து நீரை எடுத்து சென்று பைன்ஸ், பூமிதார், ஜோலிகோட், நாராயண் நகர், பவாலி, ராம்கர், முக்தேஷ்வர் ஆகிய பகுதிகளில் எரியும் காடுகளின் மீது நீரை ஊற்றி தீயணைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இதுகுறித்து முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறியதாவது, “தீயை கட்டுக்குள் கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

விரைவில் தீ முழுவதும் அணைக்கப்படும்” என்று தெரிவித்தார். நைனிடால் காட்டு தீ விபத்து காரணமாக ஏரியில் படகு சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனிடையே ருத்ரபிராயக்கில் காடுகளுக்கு தீ வைக்க முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post நைனிடாலில் பயங்கர காட்டு தீ appeared first on Dinakaran.

Tags : Nainital ,Army ,Air Force ,Dehradun ,Uttarakhand ,Haldwani district ,Dinakaran ,
× RELATED ராணுவ கேப்டன், கணவர் தற்கொலை